ADVERTISEMENT

சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு

07:54 AM Jun 12, 2019 | kirubahar@nakk…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு திங்கள்கிழமை நடந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். கார்மாங்குடி வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி ராமலிங்கம், காட்டுமன்னார்கோவில் சங்கர், வாண்டையார் இருப்பு செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு அறிமுக உரையாற்றினார். மருத்துவர் ஜெயராஜமூர்த்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிசெல்வன், சென்னை கடற்கரை வளமைய சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், "இத்திட்டத்தில் பூமியை துளையிட்டு 90 சதவீதம் தண்ணீர் 10 சதவீதம் எண்ணெய் எடுக்கிறார்கள். இதை தொடர்ந்து எடுத்தால் பூமிக்குள் வெற்றிடம் ஏற்படும். பல அடுக்கு பாறைகளை நொறுக்கியும், வெடி வைத்தும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் மேல உள்ள தண்ணீர் அந்த வெற்றிடத்தை நிரப்பும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். நிலம் உள் வாங்கும். இந்த திட்டத்தினால் வண்டல் மண் உள்ள சமவெளி பகுதியான காவிரி டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்படும். கடல் மட்டத்தை விட நில மட்டம் தாழ்ந்து கடல் உள்ளே புகுந்துவிடும். இத்திட்டத்தினால் பல ஊர்கள் கடலுக்குள் இருக்கும். மேலும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படும். பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். எல்லோரும் கை கோர்த்து டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து நாம் போராடவில்லை என்றால் தலைமுறை குற்றவாளியாவோம். இதனால் காவிரி படுகை பாலைவனமாகும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும், தமிழகத்தில் இத்திட்டத்தினால் 70 லட்சம் பேர் அகதிகள் ஆக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்" என்றார்.

இக்கூட்டத்தில் திடீரென கலந்து கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசுகையில், "இத்திட்டத்தினால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறும். இதை எதிர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த சக்தி சிதறிவிடக்கூடாது. இந்த தேர்தலில் மோடிக்கு எதிரான வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தியிருந்தால் மோடி ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இந்த திட்டத்தை எதிர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க தலைவர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் நன்றி கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT