Skip to main content

மீண்டும் ஹைட்ரோ கார்பன் பூதம்!-மிரட்சியில் டெல்டா விவசாயிகள்! 

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

கிட்டத் தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, தமிழக டெல்டா விவசாயிகளின் வயிற்றில் மீண்டும் புளியைக் கரைத்திருக்கிறது ஹைட்ரோ கார்பன் பூதம். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

 

Hydro-carbon again!

 

ஏற்கனவே 4 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது, மேலும் ஒரு ஏலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும்,  மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அரசாணை வெளியிட்டுள்ளது.    

ஏற்கனவே,  தமிழ்நாட்டில் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள  பரப்பளவு 3,200 ச.கி.மீ.  ஆனால், இப்போது 5-வது உரிமம் வழங்கப்படவுள்ள நிலப்பரப்பு 4,064 ச.கி.மீ.   அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க மத்திய அரசு கச்சிதமாகத் திட்டமிட்டுள்ளது. 5-வது ஏலத்திற்கான அறிவிப்பு,  ஜன.15-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Hydro-carbon again!


5-வது திட்டம் புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும் முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை. இந்தப் பகுதிகள்தான் மீன் வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

 ‘ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்தின்மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’  என அஞ்சுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.

ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, மக்களின் கருத்து கேட்பது அவசியம். ஆனால், இப்போது கருத்து கேட்க வேண்டாம், சுற்றுச் சூழல் துறையின் அனுமதியும் அவசியம் இல்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையால் டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.