ADVERTISEMENT

''ஆபத்துக் காலத்தில் சின்னம், கட்சி, கொடி எல்லாம் பார்க்கக்கூடாது''-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்

06:42 PM Feb 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில் காந்தி சிலை அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், ''உயிரே உறவே தமிழே வணக்கம். இங்கே வந்திருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு என் வணக்கம். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்காக அதன் சார்பில் இங்கே இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக வாக்கு சேகரிக்க நான் வந்திருக்கிறேன். இன்னொரு சின்னத்திற்காக ஓட்டு கேட்டதாக என்னை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆபத்துக் காலத்தில் இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சின்னம், கட்சி, கொடி எல்லாம் தாண்டியது தேசம். அதை காக்க வேண்டும் என்று வரும் பொழுது யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

ஜனநாயகம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட அபாயமற்ற வழி என்று நம்பிவிட முடியாது. ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் நம்மளை ஆட்கொள்ள முடியும் என்பதற்கான பல சான்றுகள் உலகத்தில் இருக்கிறது. இன்று இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக நான் இங்கே வந்திருக்கிறேன். இது போக எங்களுக்குள் உறவு இருக்கிறது. அவரும் பெரியாரின் பேரன்தான் நானும் பெரியாரின் பேரன் தான். இது என்ன காந்தியாரிடம் போய் நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்கிறார் பெரியார் கிட்ட வந்தா பெரியாரின் பேரன் என்கிறார் என்று கேட்டால்... நான் சொல்கிறேன் பெரியார் காந்தியாரின் தம்பி. வெவ்வேறு கருத்துக்கள், வெவ்வேறு கொள்கைகளாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கூட்டத்திலிருந்து எனது தாத்தா பேசுவதை கேட்டு வளர்ந்த பிள்ளை நான். இன்று நான் விட்டுப்போன ஒரு கடமையை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று கூட நினைக்கிறேன்.

நான் அரசியலுக்கு வந்தது எந்த விதமான லாபத்திற்காகவோ ஆதாயத்திற்காகவோ அல்ல. அப்படி இவர்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்றால் எப்பொழுதோ வைத்திருக்க வேண்டும். விஸ்வரூபம் என்று ஒரு படம் எடுத்தேன் அப்பொழுது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். அப்பொழுது கலைஞர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயப்படாதே உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். வேண்டாம் ஐயா இது நாட்டு பிரச்சனை அல்ல என் பிரச்சனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் போன் செய்து உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அப்போது அல்லவா நான் கூட்டணி வைத்திருக்க வேண்டும். அப்பொழுதும் நான் கூட்டணி வைக்கவில்லை. சுயநலத்திற்காக நான் கூட்டணி வைக்கவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் இது என்னுடைய பிரச்சனை என்று சொன்னேன். அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு என் கடனை எல்லாம் அடைத்து இப்பொழுதும் இந்த எந்த லாபமும் எதிர்பார்க்காமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கே வந்திருப்பதற்கான காரணம் நம் நாடு. இந்த கட்சியின் சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது ஒரு இந்தியனாக என்னுடைய கடமை'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT