ADVERTISEMENT

கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் என்பதற்காக தூர்வாராமல் இருப்பதா?- தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி. ஆவேசம்..!

07:21 PM Dec 23, 2019 | Anonymous (not verified)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் மற்றும் திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. சார்பாக 19வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ரா.பத்மாவதி மற்றும் திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 17வது வார்டில் தி.மு.க. சார்பாக போட்டியிடும் பா.சோபியாராணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினருமான இ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



சிறுநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய இ.பெரியசாமி, "கலைஞர் ஆட்சியின் போது கடந்த 9 வருடங்களுக்கு முன்பு வெள்ளோடு மற்றும் அருகில் உள்ள ஊராட்சி மக்களின் நலன் கருதியும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதியும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரி முயற்சியால் இப்பகுதியில் சிறுமலை அடிவாரத்தில் ஆணைவிழுந்தான் ஓடை மற்றும் ராமக்கல் ஓடை நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.

மழை பெய்யும்போது நீர்த்தேக்கத்தில் மழைநீர் தேங்கியதால் இப்பகுதி விவசாயிகள் நல்லமுறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த ஒன்பது வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் 900 கோடியில் குடிமராமத்து பணி (தூர்வாரும் பணி) செய்த எடப்பாடி அரசு இந்த நீர்த்தேக்கத்தை மட்டும் தூர்வாரவில்லை. மாவட்டத்தில் உள்ள யாருக்கும் பயன்படாத குளம், குட்டைகளை கூட தூர்வாரி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் கடிதம் மூலம் தமிழக முதல்வருக்கு இந்த நீர்த்தேக்கத்தை தூர்வார மனு கொடுக்க தயாராக உள்ளோம். தமிழக அரசு உடனடியாக இந்த நீர்த்தேக்க பகுதியை தூர்வாரி மழைத் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சிறுபான்மையினர் நடத்தும் நர்சிங் கல்லூரிகளுக்கு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அனுமதி வழங்கியதால் கிராமப்புற மாணவியரும் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்ததால் இன்று அவர்களால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க முடிகிறது. அதற்கு ஒரே காரணம் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் தான்.

சொத்துவரியை உயர்த்தும் போது, தி.மு.க. ஆட்சியின் போது ஒரு பைசா கூட வரியாக போடவில்லை. அதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்தார்கள். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் வரி, எங்கு திரும்பினாலும் வரி, இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற ஊராட்சிகள் மேன்மையடைய நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் பொது ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன், திண்டுக்கல் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பெருமாள்சாமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, வெள்ளொடு ஊராட்சி கழக செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சார்லஸ், சின்னாளபட்டி நகர முன்னாள் செயலாளர்கள் தி.சு.அறிவழகன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வி.எ.டி.பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜகணேஷ், சின்னாளபட்டி நகர பொருளாளர் எஸ்.ஆர்.முருகன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT