ADVERTISEMENT

காலதாமதமான பிரேதப் பரிசோதனை... பொது மக்களின் சாலை மறியலுக்கு பின்பு நடவடிக்கை! 

03:42 PM Jun 21, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது செங்குறிச்சி. இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகப்பன் - சிவசக்தி (22) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது சாய் கிருஷ்ணா என்ற இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அழகப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது மனைவி சிவசக்திக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது. குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு கணவரிடம் பலமுறை வலியுறுத்திவந்துள்ளார் சிவசக்தி. ஆனால் அழகப்பன் குடிப்பழக்கத்தைக் கைவிடவில்லை, வழக்கம்போல் நேற்றும் (20.06.5021) அழகப்பன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

இதனால் வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனம் வெறுத்துப்போன சிவசக்தி வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு உடனடியாக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சிவசக்தி திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துபோனதால் அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் அவர்கள் உரிய விசாரணை செய்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும். அதன்படி திருக்கோவிலூர் கோட்டத்தில் இந்த ஊர் அமைந்துள்ளதால் அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய் வர்தினி முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்.

ஆனால், சிவசக்தியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியர் சாய் வர்தினி விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை விசாரணை செய்து பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரைச் சான்று அளிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், "திருக்கோவிலூர் கோட்டாட்சியர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். நான் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது" என கூறி மறுத்துள்ளார். இரு அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் பிரேதப் பரிசோதனை செய்வது காலதாமதமாகி உள்ளது. அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் கோபமடைந்த சிவசக்தி உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை உடனடியாக பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரை செய்யுமாறு வாய்மொழி உத்தரவிட்டதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் பரிந்துரை சான்றளிக்க அதன் பிறகு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சாலை மறியல் செய்த பொதுமக்கள் மற்றும் சிவசக்தி உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அகால மரணம் அடைந்த ஒரு இளம்பெண்ணின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதற்கு மருத்துவர்கள் காவல்துறையினர் முயற்சி செய்தும் வருவாய்த்துறையைச் சேர்ந்த கோட்டாட்சியர்கள் பரிந்துரைச் சான்று அழிப்பதற்கு தட்டிக்கழித்ததன் காரணமாக காலதாமதமானது. அரசு அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் தங்கள் பணியைத் திறம்பட செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு யார் அறிவுரை சொல்வது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT