/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died-1_7.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயது கூலி தொழிலாளி சீனிவாசன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற சீனிவாசன் உழைத்து சம்பாதித்த பணத்தில் குடித்துவிட்டு வெறுங்கையோடு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி பூமாதேவி கணவரிடம் தினசரி வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்ற பணத்தில் இப்படி குடித்துவிட்டு வந்தால் நாம் நமது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது, பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சண்டை போட்டுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அவரது மகன் குபேந்திரன் தாய் தந்தை இருவருக்கும் இடையே நடந்த சண்டையை தடுக்க முயன்றார். அவர் தடுப்பதையும் மீறி அவரது தந்தை சீனிவாசன் தாயாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் கோபமுற்ற குபேந்திரன் தந்தை சீனிவாசன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மகன் தன்னை கன்னத்தில் அறைந்ததும் சீனிவாசனின் போதை கலைந்து சுயநினைவு அடைந்தார். பலர் பார்க்க தான் பெற்ற மகன் தன் கன்னத்தில் அறைந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதை அவமானமாகக் கருதினார். இதனால் மனம் வெறுத்துப் போன சீனிவாசன் மீண்டும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்து அதில் விஷத்தைக் கலந்து குடித்துள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்த்தினர் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சீனிவாசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தந்தையை தாம் அறைந்ததால் தானே அதை அவமானமாகக் கருதி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதை அறிந்த அவரது மகன் குபேந்திரன் மிகவும் வேதனைப்பட்டார். தனது தந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு நாம் தானே பொறுப்பு ஊர் நம்மை பலவாறு பேசுமே என்று மனம் நொந்து போன குபேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்ட அவரது உறவினர்கள் குபேந்திரன் உடலை எடுத்துச் சென்று தீ வைத்து எரித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எல வாசனூர் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட குபேந்திரன் உடலை எங்களுக்குத் தெரியாமல் ஏன் எரித்தீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். தந்தை மகனுக்கு ஏற்பட்ட சண்டையில் தந்தை தற்கொலைக்கு முயற்சிக்க அதற்கு நாம் காரணமாகி விட்டோமோ என்று மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புகைப்பட்டி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)