ADVERTISEMENT

த.மு.எ.க. சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு.கருணா உயிரிழப்பு..!

10:44 AM Dec 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கருணா என்கிற கருப்பு கருணா. திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவில் இருந்த இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார்.

1985களில் திருவண்ணாமலை நகரில் கலை இரவுகள் தொடங்கி அதை தமிழகம் முழுமைக்கும் பிரபலமாக்கியதில் கருணாவின் பங்கு முக்கியமானது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து பிரபலமான கவிஞர்களை அழைத்துவந்து திருவண்ணாமலையில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார்கள் கருணாவும் அவரது இலக்கிய நண்பர்களும்.

தற்காலத்தில் முற்போக்கு சினிமா இயக்குநர்கள், படங்கள் குறித்து விமர்சனக் கூட்டம் நடத்துவது, முற்போக்குத் திரைக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது, குழந்தைகளுக்கான திரைப்படங்கள், நாடகங்கள் நடத்துவது எனத் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருந்தார். த.மு.எ.க.சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பயணம் செய்துகொண்டு இருந்தார்.

தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் காணொளி வெளியாகிப் பரப்பான போது, கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா, தனது பூர்வீக ஊரான திருவண்ணாமலை நகரத்தில் மக்கள் தன்னை ஆராதிக்கிறார்கள் என வெளியுலகுக்குக் காட்ட முயன்றார். அப்போது அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் அதனை அமைதியாக வேடிக்கை பார்க்க, நித்தியானந்தாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட, தான் சார்ந்த இயக்கம் வழியாக முயற்சி எடுத்து எதிர்ப்பை பதிவு செய்தார் கருப்பு.கருணா.

திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையை நித்தியானந்தா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு குடியிருந்த ஏழை மக்களை விரட்டியபோதும், அந்த மலையை வருவாய்த்துறையில் உள்ள சில அதிகாரிகளுக்குப் பணம் தந்து பட்டா மாற்றியபோது, மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாகப் போராடி, பல போராட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தியது. இதற்காகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்த இவர் மீது காவல்நிலையத்தில் பொய்யாகப் புகார்கள் தந்தது நித்தியானந்தா தரப்பு.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் கருப்பு கருணா உட்படச் சிலரைக் குறிவைத்து ஆபாசமாக எழுதியது, நித்தியானந்தாவுடன் உள்ள பெண் சாமியாரினிகள் எனப்படும் இளம் பெண்கள் வழியாக கருப்பு கருணாவை, அவரது குடும்பத்தை சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்தி காணொளி வெளியிட்டார்கள். அவருக்குப் பலவிதமான மிரட்டல்களையும் விடுத்தார்கள். அதனையெல்லாம் தாண்டி மக்களுக்காகக் களத்தில் தொடர்ச்சியாக இயங்கி வந்தார் கருப்பு.கருணா.

இப்படி இயங்கிவந்த அவருக்கு டிசம்பர் 21ஆம் தேதி காலை திடீரென கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என உறுதி செய்துள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாரோனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின் டிசம்பர் 22ஆம் தேதி, அவரது உடல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT