Skip to main content

 ’’தொடர்ந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி சட்டமன்றத்தில் பேச வாய்ப்பளிக்காதது கண்டிக்கத்தக்கது” - ஸ்டாலின்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
sm

 

இன்று (25-06-2018) தமிழக சட்டப்பேரவையில், கழக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு, நேரமில்லா நேரத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக ஆய்வுகள் மேற்கொண்டு வரும் தமிழக ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் பற்றி பேசிட வேண்டுமென சபாநாயகரிடத்தில் கோரிக்கை வைத்தார். 1995ல் ஏற்கனவே “ஆளுநரைப் பற்றிப் பேசுவதற்கான விதி” தளர்த்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியும், பேச வாய்ப்பளிக்காத காரணத்தால் அதனைக் கண்டிக்கின்ற வகையில் அவையிலிருந்து தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அவையில் கழக செயல் தலைவர் அவர்கள் பேசிய விவரம் பின்வருமாறு:

 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

சென்னை மாநகரத்தில் பல இடங்களில் மக்களுக்கு பட்டா வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. உதாரணமாக, வருவாய்த்துறைக்கு உட்பட்டிருக்கக்கூடிய என்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஜி.கே.எம் காலனியிலே 4,500 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்னும் ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் கேட்டால், அது வேறு ஒரு துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்திய பிறகுதான், சம்பந்தபட்ட நிலங்களை குடிசை மாற்று வாரியத்திற்கு துறப்பு செய்யாததால் பட்டா கிடைக்காமல் இருக்கிறது என்ற செய்திகள் வந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட சென்னையில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட திட்டப் பகுதியிலே பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது. அதனால், அந்த இடத்தினுடைய உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத நிலையிலே தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, உடனடியாக சம்மந்தப்பட்ட நிலங்களை குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றம் செய்து, பட்டா வழங்கக்கூடிய முயற்சியில் அரசு ஈடுபட வேண்டுமென்று நான் தங்கள் மூலமாக கேட்டு அமைகிறேன்.

(அமைச்சர் பதில்)

 

 ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தினுடைய ஆளுநர் அவர்கள் மாவட்ட வாரியாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆய்வுகள் குறித்து....

 

(சபாநாயகர் குறுக்கீடு)

ஸ்டாலின்: 1995-ல் இதே அவையிலே ஆளுநர் மீது நடவடிக்கை எடுத்து ஆளுநரை நீக்க வேண்டுமென்று, கடந்த காலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அன்றைக்கு அமைச்சராக இருந்த நாவலர் அவர்கள் மூலம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது, அது அவைக்குறிப்பில் இருக்கிறது. இந்த வாதம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக தனிப்பட்ட முறையில் எடுத்து வைக்கக்கூடிய வாதம் இல்லை. இன்றைக்கு, ஆளும் கட்சியாக இருக்கும் உங்களுக்கும் சேர்த்து தான் இந்த வாதத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். எனவே, இதை அனுமதிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

(சபாநாயகர் குறுக்கீடு)

 

ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த நேரத்தில் தமிழ்நாடு தான் மாநில சுயாட்சிக்காக முதன்முதலில் இந்தியாவிலேயே தீர்மானம் கொண்டு வந்தது. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்திலே தான், மத்திய மாநில உறவுகள் குறித்து முதன் முதலில் நிபுணர் குழு அமைத்து, அதற்கு ஒரு விரிவான அறிக்கை இந்த அவையிலே வெளியிடப்பட்டது. இந்த ஆட்சிக்கு முன்பு வரை மாநிலத்தில் பொறுப்பில் இருந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி, இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த நேரத்திலும் அரசினுடைய உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், இதே அவையிலே “விதிகளையே சஸ்பெண்ட்” செய்து மாநில ஆளுநர் பற்றி விவாதம் நடத்தி ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அவைக்குறிப்பிலே தெளிவாக இருக்கிறது. அப்படி இருக்கும் மாநிலத்தில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தொடர்ந்து மாவட்ட ரீதியாக தொடர்ந்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.

 

(சபாநாயகர் விளக்கம்)

 

 ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கனவே அந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறது. தளர்த்தப்பட்டு அனுமதி தந்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதே அடிப்படையில் உங்களிடத்திலே நான் வைக்கக்கூடிய வேண்டுகோள், ஏற்கனவே இந்த அவையிலே எப்படி இந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறதோ அதை தளர்த்தி அந்த அடிப்படையிலே அவையை ஒத்திவைத்து அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நான் பேரவைத்தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

 

(சபாநாயகர் விளக்கம்)

 

ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1995-ல் இந்த விதியை தளர்த்தி பேசுவதற்கும், விவாதிக்கவும் அனுமதிக்கப்பட்டு, ஆளுநரை நீக்க வேண்டுமென்ற தீர்மானம் இதே அவையிலே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுவும் அவைக்குறிப்பிலே இருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் பேரவைத் தலைவராகிய உங்களிடத்தில் நான் அனுமதி கேட்கிறேன். நான் நீங்கள் சொல்லக்கூடிய விதிகளை எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன் அதை மறுக்கவில்லை, ஆனால் தளர்த்துவதற்கு உண்டான எல்லாவித உரிமைகளும் உங்களுக்கு உண்டு. ஆகவே, அந்த விதியை தளர்த்தி அதுபற்றி விவாதிப்பதற்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் ஆகிய உங்களிடம் நேரம் கேட்கிறோம். நீங்கள், விவாதிப்பதற்கு நேரம் கொடுத்து வாய்ப்பு வழங்கவில்லை என்று சொன்னால், நாங்கள் அதனைக் கண்டித்து இந்த அவையில் இருந்து வெளி நடப்பு செய்வோம்.

 

(சபாநாயகர் விளக்கம்)

 

ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாங்கள் முழு மனதுடன் உங்களுக்கு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். ஆனால், மாநில சுயாட்சி பறிபோகக்கூடிய நிலையிலே, ஏதோ, திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக தனிப்பட்ட முறையிலே நான் இதுகுறித்து கேட்கவில்லை. இன்றைக்கு ஆட்சியிலே இருக்கக்கூடிய அ.தி.மு.க அரசுக்கும் சேர்த்து, இந்த மாநிலத்தின் உரிமையை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற அந்த சூழ்நிலையில் தான் அந்தக் கருத்தை எடுத்து சொல்லியிருக்கிறேன். நீங்கள் அதை தளர்த்தி தருவதற்கு முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறீர்கள். எனவே, இதுபற்றி பேச நீங்கள் அனுமதிக்காத காரணத்தால் இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த அவையில் இருந்து வெளி நடப்பு செய்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் பின்வருமாறு:

 

இன்று நேரமில்லா நேரத்தில், தமிழகத்தினுடைய ஆளுநராக இருக்கக்கூடியவர் வரம்பு மீறி, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, இது முறைதானா என்று ஒரு கேள்வியை கேட்டு அது குறித்து பேசிட வேண்டுமென்று சபாநாயகரிடத்திலே அனுமதி கேட்டேன். ஆளுநரை பற்றி அவையிலே பேசுவதற்கு இடமில்லை, அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். நான் உடனடியாக இதே அவையில் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அன்றைக்கு தமிழகத்தின் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியை பற்றி அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நீண்ட விவாதமே நடத்தப்பட்டிருக்கிறது.

அப்படி நடத்தப்பட்ட நேரத்தில் ஒரு தீர்மானமும் நிறைவாக கொண்டு வரப்பட்டு அந்த தீர்மானத்தை அன்றைக்கு நிதியமைச்சராக இருந்த நாவலர் அவர்கள் முன்மொழிந்து அதற்குப் பிறகு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒரு ஆளுநரைப் பற்றி இந்த அவையில் நீண்ட விவாதமே நடைபெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை நீக்கிட வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றி இருக்கின்ற நேரத்தில் அதனை நான் சுட்டிக்காட்டி, இப்பொழுது இருக்கக் கூடிய ஆளுநரை பற்றி பேசிட வேண்டும், அவர் செய்து கொண்டிருக்கக்கூடிய செயல்பாடுகளை பற்றி இந்த அவையிலே விவாதிக்க வேண்டும் என்று நான் திரும்ப திரும்ப கேட்ட பொழுது அதெல்லாம் முடியாது அது 1995 ஆம் ஆண்டு நடந்த கதை. இப்பொழுது நான் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். எனவே, சபாநயகர் அவர்கள் மறுத்த காரணத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ஆளுநர்  நேற்றைக்கு அவருடைய செயலாளர் மூலமாக பத்திரிகைகளுக்கு ராஜ்பவனிலிருந்து செய்தி குறிப்பு வெளியடப்பட்டிருக்கிறார். அதிலே, ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகளில் யாராவது தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் ஆய்வு நடத்துவதை தடுத்தால் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை கிடைக்கக்கூடிய வகையில் வழக்குப் போடப்படும் என்றெல்லாம் மிரட்டல் தொனியிலே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து ஆளுநர் அவர்கள் இதுபோன்ற ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவார் என்று சொன்னால், நிச்சயமாக அதைக் கண்டிக்கக்கூடிய வகையில் அதை எதிர்த்து கறுப்புக் கொடியைக் காட்டக்கூடிய போராட்டத்தை தொடர்ந்து இது வரையில் நடத்தியிருக்கிறோம், தொடர்ந்து நடத்தப் போகிறோம்.

எனவே, எவ்வளவு ஆண்டுகாலம் என்றெல்லாம் இல்லை, ஏழாண்டு அல்ல ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமென்று சொன்னால் கூட மாநில சுயாட்சியினுடைய கொள்கைக்காக அண்ணா, கலைஞர் அவர்கள் வகுத்துக் தந்திருக்கக்கூடிய அந்த மாநில சுயாட்சியினுடைய கொள்கை வெற்றி பெற அதை நிலை நிறுத்திட எந்த தியாகத்தையும் செய்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

செய்தியாளர்: இந்த 8 வழிச்சாலையினால் தொடர்ச்சியாக மக்கள் போராடிக் கொண்டிக்கிறார்கள் ஆனால், முதலைமைச்சர் சொல்கிறார் பொது மக்களே நிலத்தை தர முன் வருகிறார்கள். ஆனால், போராட்டத்திற்கு வருபவர்களை போலிசார் கைது செய்கிறார்களே?

ஸ்டாலின்: சேலத்திற்கு சென்று விமான நிலையத்தில் பேட்டி தந்துவிட்டு வருகிறார். அவருக்கு உள்ளபடியே சொல்கிற எண்ணம் இருந்தால், பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்ற பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மக்களிடத்தில் பேச சொல்லுங்கள். அப்படி, பேசிட்டு வந்து அந்த பதிலை சொல்லச் சொல்லுங்கள் அப்போது நான் ஏற்று கொள்கிறேன்.

 

செய்தியாளர்: சேலம் 8 வழிச் சாலை தொர்பாக ஏற்கனவே பேரவையிலே பேசியிருக்கிறீர்கள். இந்த நிலையில் தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறதே?
 ஸ்டாலின்:  ஏற்கனவே இப்பிரச்சினை குறித்து அவையிலே பேசியிருக்கிறேன்.  அந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த திட்டத்தை செயல்படுத்துகிற பொழுது மக்களுடைய உணர்வுகளை கருத்து கேட்பு என்ற அடிப்படையிலே கேட்டு அதற்குப் பிறகு அந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அதற்குப் பிறகு, பிரச்சினை பெரிது பெரிதாக நீண்டு கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் கூட மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்.  மாற்று வழி ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய அதற்கு ஒரு நிபுணர் குழு அமைத்து அந்த அடிப்படையிலே இந்த திட்டத்தைக் கொண்டு வாருங்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், இந்த ஆட்சியைப் பொருத்த வரைக்கும் அதுவும் எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சியை பொறுத்த வரைக்கும் இதில் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம், இந்த ஆட்சி தொடர்ந்து இருக்கப் போவதில்லை. இப்படி, இருக்கக்கூடிய இந்த கால கட்டத்திலேயே எத்தனை கோடி ரூபாய் கொள்ளை அடித்து விட்டு போகலாம் என்ற திட்டத்திலே தான் இந்த திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். மற்றபடி, மக்களுக்காகவோ அங்கிருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுக்காகவோ ஏதோ வாகன போக்குவரத்து சுலபமாக நடக்க வேண்டும் என்பதற்காகவோ கொண்டுவரக்கூடிய திட்டம் இல்லை கமிஷன் வாங்குவதற்காக, கொள்ளையடிப்பதற்காக கொண்டுவரக்கூடிய திட்டம் இது.

செய்தியாளர்: 8 வழிச்சாலை தொடர்பாக யார் வந்து பேசினாலும் கைது நடவடிக்கை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஸ்டாலின்: இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து நாங்கள் இதற்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம், எங்களுடைய போராட்டங்களும் தொடர்ந்து நடக்கும்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

 

பின்னர் அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டு கழக செயல் தலைவர் ஸ்டாலின்  பேசிய விவரம் பின்வருமாறு:

 

ஸ்டாலின்: சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் அவர்கள் பேசிய கருத்துக்கு, அந்தத் துறையினுடைய அமைச்சர் விளக்கம் தந்திருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, புதிதாக சிவாஜியினுடைய சிலை தயாரிக்கப்பட்டு ஒரு மணிமண்டபத்திலே வைத்தால், அவர்கள் சொல்லுகிற அந்த விதிமுறையை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏற்கனவே, இருந்த சிலையை கொண்டுபோய் நீங்கள் மணிமண்டபத்திலே வைத்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, மணிமண்டபத்திலே வைக்கிற போது சாலையிலே செல்லக்கூடிய மக்களுக்கு பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. எனவே, மணிமண்டபத்திற்கு சென்றால் தான் சிவாஜி சிலை பார்க்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. எனவே, அந்த சிவாஜி சிலையை கடற்கரை சாலையிலே கொண்டுவந்து மீண்டும் வைக்க வேண்டும் என்று கூட நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை, அந்த மணிமண்டப வளாகப்பகுதியில் வெளியிலே வைத்தால் கூட மக்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஏற்கனவே சிலையிலே இருந்த கல்வெட்டில், முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரும் இருந்திருக்கிறது. எனவே, அந்தப் பெயரையும் பதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கான, விளக்கத்தை அமைச்சர் மூலமாக நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

(அமைச்சர் பதில்)

(சபாநாயகர் விளக்கம்)

சார்ந்த செய்திகள்