ADVERTISEMENT

ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் சிறுவனின் உடல்; பதற வைக்கும் கொடூர சம்பவம்

05:50 PM Sep 21, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரண்டு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் சடலம் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ளது திருப்பாலபந்தல் கிராமம். அங்கு வசித்து வந்த குருமூர்த்தி - ஜெகதீஸ்வரி தம்பதிக்கு திருமூர்த்தி என்ற இரண்டு வயது மகன் இருந்தான். கடந்த 17 ஆம் தேதி வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திருமூர்த்தி காணாமல் போனான். திருமூர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்கள் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் எழுந்தது. சிறுவனின் தந்தை குருமூர்த்தி வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் கலைத்து தேட ஆரம்பித்தார். அப்பொழுது குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் இருக்கும் அறைக்குள் இருந்து அதிகப்படியான துர்நாற்றம் வந்தது. உள்ளே சென்று தேட முயன்றபோது, பூனை அல்லது பெருச்சாளி இறந்திருக்கலாம் என ராஜேஷ் சொல்லியுள்ளார். இதனால் தேடுவதை நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு ராஜேஷ் வெளியே சென்றுவிட்ட பின்னர் மீண்டும் அவர் அறைக்குள் சென்று சோதித்துள்ளனர். அப்பொழுது ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்றின் உள்ளே இருந்து துர்நாற்றம் வருவது அறிந்து அதை உடைத்துப் பார்த்தபோது அதிர்ச்சி தரும் வகையில் சிறுவன் அதற்குள் உயிரிழந்த நிலையில் அடைத்து வைக்கப்பட்டுக் கிடந்தான்.

அழுகிய நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்ட பெற்றோர், கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களைப் பதற வைத்தது. தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தில் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரித்தபொழுது, சொத்து தகராறு தொடர்பாக அண்ணனும், அண்ணியும் சண்டையிட்டு வந்ததால் அவரது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஸ்பீக்கர் பாக்ஸ்க்குள் வைத்ததாக ராஜேஷ் ஒப்புதல் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT