ADVERTISEMENT

'மோடியின்  கண்ணீரை அவரது கண்ணே நம்பாது'- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

10:25 AM Mar 30, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் சேலம் வந்திருந்த பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது கண் கலங்கி பேசியிருந்தார். இந்நிலையில், சேலம் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்,

ADVERTISEMENT

'நேற்று மாலைச் செய்தி:
தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி:
அழகிய தமிழ்ச் சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே...

கருப்புப் பணம் மீட்பு,
மீனவர்கள் பாதுகாப்பு,
2 கோடி வேலைவாய்ப்பு,
ஊழல் ஒழிப்பு போல்
காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,
அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT