ADVERTISEMENT

பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்து நடத்துநர்! நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! 

04:45 PM Jul 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகில் உள்ள தேவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அந்தப் பேருந்து நடத்துநர் திருக்கோவிலூர் செல்வதற்கு ரூ.32 கட்டணம் தருமாறு கேட்டார். அதற்கு கருணா, அனைத்து பேருந்துகளிலும், ரூ. 25 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் மட்டும் ரூ.7 கூடுதலாக ஏன் கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு நடத்துநர், எங்கள் அதிகாரிகள் ரூ.32 கட்டணம் வசூலிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர் எனக் கருணாவிடமிருந்து ரூ.32 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கருணா, விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு பேருந்து நடத்துநர் கணேஷ், திருக்கோவிலூர் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் மற்றும் விழுப்புரம் மண்டல மேலாண்மை இயக்குநர் ஆகியோரை எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து இன்று நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், ’நியாயமற்ற வர்த்தக நடைமுறையின் படி முறையீட்டாளரிடமிருந்து அதிகமாக பஸ் கட்டணம் பெற்றது தவறு. அப்படி கூடுதலாக பெற்ற கட்ணத் தொகை ஏழு ரூபாய் மற்றும் அதற்கு அன்றைய தேதியில் இருந்து 12 சதவீத வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்க வேண்டும். முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், மனவேதனை, வீண் அலைச்சலுக்கு இழப்பீடாக 25,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதோடு வழக்குச் செலவுக்காக 5000 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT