Three trapped by government officials!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் தொடர் மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பயிரிட்டிருந்த சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர் வகைகள் நாசமாகின. பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிவாரணத் தொகையைப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவரவர் பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும். அப்படி அளிக்கும்போது நிலத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து முறைப்படி பெற்று மனுவுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்வார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு நிவாரணம் பெறுவதற்கு இந்த வழிமுறை பின்பற்றப்பட்டுவருகிறது.

Advertisment

இதை பயன்படுத்திக்கொண்டு முறைகேடான வழியில் நிவாரணம் பெறுவதற்காக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, முருகன், ஐயனார், அருண், மஞ்சுளா ஆகியோர் அவர்களது பகுதி கிராம நிர்வாக அலுவலரின்கையெழுத்து, அவர் பயன்படுத்தும் முத்திரை ஆகியவற்றை போலியாக தயாரித்து அதற்கான ஆவணங்களைத் தயார் செய்து மனுவுடன் இணைத்து வேளாண்மைத் துறை அதிகாரியிடம் கொடுத்துள்ளனர்.

Advertisment

அதைப் பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை வரவழைத்து அவர் முன்னிலையில் அந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட திருக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு, ஆவணங்கள் தயாரித்த மேற்படி ஐவர் மீதும் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தியதில் மேற்படி நபர்கள் போலி ஆவணம் தயார் செய்தது உண்மை என தெரியவந்துள்ளது.

அதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மஞ்சுளா, தண்டபாணி, அய்யனார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேற்கொண்டு தலைமறைவாக உள்ள அருண், முருகன் ஆகியோரை தீவிரமாக தேடிவருகின்றனர். அரசு உதவிபெற போலி ஆவணம் தயாரித்து போலீசாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.