ADVERTISEMENT

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீச்சு!

07:14 PM Mar 06, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த நாகூர் அனிபா என்ற இளைஞர் காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமி மயங்கிய நிலையில் தாயார் மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிறுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர், சிறுமி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தும்பைப்பட்டியைச் சேர்ந்த நாகூர் அனிபா, அவரது தந்தை சுல்தான், தாய் மதினா, சகோதரர் ராஜாமுகமது மற்றும் உறவினர்களான ரம்ஜான்பேகம், சாகுல் ஹமீது உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மதுரையில் இருந்து திருச்சி செல்லும் தும்பைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து மீது 5- க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், கல் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் அயிலா, லக்சிதா உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், தும்பைப்பட்டியில் 500- க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் கூடி இருப்பதால், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT