Skip to main content

பொங்கலை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

 Goats for sale for 2 crore at Ulundurpet market ahead of Pongal

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆடுகள் மற்றும் காய்கறிகள் சந்தை புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

 

இந்த சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். இதற்காக விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்ல வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களின் போது இங்கு நடைபெறும் சந்தையில் ஆடுகள் விற்பனை பல கோடிகளுக்கு வியாபாரமாவது வழக்கம்.

 

தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக இந்தச் சந்தையில், ஆடுகள் வழங்குவது உண்டு. மேலும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பக்ரீத், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் உட்பட அனைத்து மதப் பண்டிகை காலங்களிலும் நடைபெறும் சந்தையின் போது ஆடுகள் விற்பனை அதிகரிக்கும். 

 

அதன்படி தற்பொழுது பொங்கலை முன்னிட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆடுகள் சந்தையில், ஒரே நாளில் சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இப்படி விலைக்கு விற்கப்பட்ட ஆடுகளை ஏற்றிச் செல்வதற்காக மினி டெம்போ, டாட்டா ஏசி, லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் உளுந்தூர்பேட்டையில் அணிவகுத்து நின்றன. சமீபகாலமாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனையும், மட்டன் சிக்கன் போன்ற அசைவங்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.