ADVERTISEMENT

“சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே இலக்கு” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

03:54 PM Aug 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே நம் இலக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் போரூர் ஏரியில் புதிய ​மதகு​ அமைத்தல் மற்றும்​ போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அசோக் நகர் 4 ஆவது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த ஆய்வுப் பணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆட்சிக்கு வந்தபோதே கொரோனா என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்தினோம். தொடர்ந்து, அனைத்துத் துறைகளையும் முடுக்கி விட்டு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை ஆலோசனைக் குழுவின் துணையோடு ஆய்வின் அடிப்படையில் அமைத்தோம். அதன் பயனைக் கடந்த பருவமழைக் காலங்களில் கண்கூடாகப் பார்த்தோம். சிறுமழைக்கே நீர் தேங்கிய பகுதிகளில், தற்போது பெருமழை பெய்தாலும் சில மணி நேரங்களில் மழைநீர் வடிவதை மக்களும் ஊடகங்களும் எடுத்துரைத்தனர்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் எஞ்சியுள்ள பகுதிகளிலும் இன்று ஆய்வு மேற்கொண்டேன். இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத்தடுப்பு மேலாண்மையில் சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே நம் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT