Chief Minister M.K.Stal's inspection at the emergency control center

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழைப்பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பல்வேறு இடங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் தொடர்ந்து தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். அதே சமயம் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்த மக்களிடம் தொலைப்பேசி வாயிலாக குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.