ADVERTISEMENT

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம பெண் உதவியாளர் தரையில் அமர்ந்து போராட்டம்; நீதிமன்ற உத்தரவை மீறும் தாசில்தார்

03:13 PM Sep 29, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே, லஞ்ச வழக்கில் தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் விடுவித்த பிறகும், பணி ஆணை வழங்க மறுத்ததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் உதவியாளர் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லோகாம்பாள். இவர், கடந்த 2020ம் ஆண்டு, அதே ஊரைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரன் என்பவரிடம் நில ஆவணம் தொடர்பாக 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கிராம நிர்வாக அலுவலர் சார்பில் லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருந்ததாக அவருடைய உதவியாளர் கீதாவும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், லஞ்ச வழக்கில் கீதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு 12 வார காலத்திற்குள் அதே பணியை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை பெற்று வந்த கீதா, அதை பரமத்தி வேலூர் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் சமர்ப்பித்து, மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, அவருக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதற்காக கீதாவை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செப். 27ம் தேதி அழைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு அவரிடம் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும், அந்த ஆவணங்களுக்கு இடையே, தங்களுடைய 'மீளப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு நிராகரிக்கப்படுகிறது' என்று எழுதப்பட்ட ஆவணத்தையும் மறைத்து வைத்து கையெழுத்துப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தின் இத்தகைய மோசடியான செயலைக் கண்டித்து கீதா, புதன்கிழமை (செப். 28), அந்த அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று கீதாவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தன்னிடம் மோசடியாக கையெழுத்து வாங்கிய ஆவணத்தை திருப்பிக் கொடுத்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகக் கூறினார்.


இதுகுறித்து வட்டாட்சியர் சிவக்குமார் கூறுகையில், ''கீதா சம்பந்தப்பட்ட வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளது. அதனால் அவருக்கு பணி ஆணை வழங்க முடியாது,'' என்றார்.


இந்த சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT