Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவரைப் பணியாற்ற விடாமல் முட்டுக்கட்டை; தரையில் அமர்ந்து திடீர் போராட்டம்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

namakkal district, rasipuram near area panchayat president


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் முருகேசன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சி மன்றச் செயலாளராக பாப்பாத்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ராமச்சந்திரன், ரயில்வே துறையில் பணியற்றுகிறார். 

 

இந்நிலையில் ஊராட்சி மன்றச் செயலாளர் பாப்பாத்தி, ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனை செயல்பட விடாமல் தடுப்பதாகவும், பாப்பாத்தியின் கணவரும் அவரை மிரட்டி வருவதாகவும் முருகேசன் புகார் கிளப்பினார். இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்களன்று (ஜன. 4) தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார் முருகேசன். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் அதிகாரிகள் முருகேசனை சமாதானப்படுத்தினர். ஊராட்சி மன்றச் செயலாளர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை ஏற்றுக்கொண்ட முருகேசன் போராட்டத்தைக் கைவிட்டார். 

 

இதைப்பற்றி முருகேசன் கூறுகையில், ''நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஊராட்சி மன்றச் செயலாளர் பாப்பாத்தி என்னைப் பணியாற்ற விடாமல் தடுக்கிறார். அதையும் மீறி செய்தால் பாப்பாத்தியின் கணவரும் என்னை மிரட்டுகிறார். இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.