
நேற்று நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில் அவரது ரசிகர்கள் அத்திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு முன்னால் தீவிர கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையிலேயே இருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் வந்த சில ரசிகர்கள் நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.மேலும், இருசக்கர வாகனங்களைத்தாறுமாறாக ஓட்டி சாலையில் எகிறிக் குதித்து ஆடியபடி ரகளையில் ஈடுபட்டனர்.

இதை அங்கிருந்த ஓட்டுநர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசும் நபர் ''ராசிபுரத்தில் ஹைஸ்கூலுக்கு எதுத்தாப்புல விஜய் ரசிகர் மன்றம் கொடிய எடுத்துக்கிட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து கொண்டு லாரியநிறுத்துறாங்க. ரோட்டில் போற வர எல்லாத்தையும் அடிக்கிறாங்க. பண்ணுங்க கலாட்டா பண்ணுங்க...நான் வீடியோ எடுக்கிறேன்.எவன்டா நீங்க அகராதி பிடிச்சவங்க'' என எச்சரித்தார். இருப்பினும் பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள் ரகளையைத்தொடர்ந்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)