ADVERTISEMENT

டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி? - போராட்டத்தில் குதித்த முன்னாள் முதல்வர்!

06:55 PM Nov 30, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே ஏராளமான மதுபானக் கடைகள் உள்ள நிலையில்,புதுச்சேரி - தமிழக எல்லை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சாமிப்பிள்ளை தோட்டத்தில், காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபான கடை அமைக்க புதுச்சேரி அரசும், கலால் துறையும் அனுமதி அளித்துள்ளது. பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான இக்கட்டடம் உள்ள பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். புதிய மதுபானக் கடை திறக்க கட்டுமான பணிகள் முடிந்து கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

புதிய மதுக்கடை வரும் பகுதியில் பிரசித்தி பெற்ற கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் நிறைய குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு ஒன்றை அமைத்து, அந்த மதுபான கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காமராஜர் மணிமண்டபம் அருகே ஒன்று கூடி புதிய மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு லெனின்.துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது.செல்வம், தமிழர் களம் மாநில அமைப்பாளர் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தியும், மதுபானக்கடைக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் முழக்கங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர். அப்போது ஒரு கட்டத்தில் அப்பகுதி பெண்கள் மதுக்கடை திறக்க உள்ள பகுதியை நோக்கி சென்ற போது போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, " புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி அளிக்கப் போவதாக தெரிகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். ஏற்கனவே ஓடும் மதுபானம் ஆறு இனி மது கடலாக மாறிவிடும். பெண்களின் போராட்டத்தின் மூலம் தான் மது கடைகளை அகற்ற முடியும் . அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT