ADVERTISEMENT

“மீனவர் நலவாரிய அட்டை வழங்க வேண்டும்” - மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

03:51 PM Nov 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மீனவர் நலவாரியத்தில் விண்ணப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக நலவாரிய அட்டைகளை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, விருதுநகர் மாவட்ட செயலாளர் சி.செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மீன் வளத்தையும் மீனவர்களையும் பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும். இந்தியாவின் 106 நதிகளையும் கடலையும் இணைக்கும் சாகர்மாலா திட்டத்தால் நதி நீரை கடல் நீராக மாற்றக்கூடாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், விவசாயம், குடிநீர் போன்ற தேவைகளுக்கு அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையேந்த வைத்துவிட வேண்டாம். கடல் மீனவரைப் போல் புயல் பருவகால சேமிப்பு நிதி, மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைவு கால நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விருதுநகர் மாவட்ட மீனவத் தொழிலாளர்களில், நலவாரிய அட்டை இருந்தும் விடுபட்டவர்களுக்கு கொரோனா நிவாரணம் உடனே வழங்க வேண்டும். மீனவத் தொழில் புரியும் அனைவரையும் மீனவக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும். 60 வயதான மீனவத் தொழிலாளர்களுக்கு மீன் வளத்துறை மூலம் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்தில் இயக்கப்படும் மீன் மார்க்கெட்களில் கழிப்பறை வசதி, குடிதண்ணீர் வசதி மற்றும் குழந்தைகள் காப்பக வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் மீனவர் நலவாரியத்தில் உடனே பதிவு செய்திட மீன் வளத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசால் மீனவர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்விநிதி உதவி, திருமண நிதி உதவி, விபத்து மற்றும் இறப்பு நிதி உதவி போன்ற பணப்பயன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதுமிருந்து பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT