Skip to main content

தொடரும் மலக்குழி மரணங்கள்..  -அருப்புக்கோட்டையில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி!

Published on 07/02/2019 | Edited on 07/02/2019
a

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பூலாங்கால் கிராமத்தில் காதர்பாட்சா என்பவரது வீட்டில்,  அருப்புக்கோட்டையைச்  சேர்ந்த சபரிநாதனும் ராஜபாண்டியும் இன்று கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் சபரிநாதன். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜபாண்டியை அருப்புக்கோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  முதலுதவி சிகிச்சை அளித்தபின் அவரை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். 

 

a

 

செப்டிக் டேங்க் விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைவது வாடிக்கையாகிவிட்டது.  அந்த நேரத்தில் இறப்பவர்கள் படும் அவஸ்தை கொடுமையானது. எப்படி தெரியுமா? முதலில்  விஷவாயு தாக்கியதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும். அதனால் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு நுரையீரல் செயலிழந்துவிடும். பிறகு,  ஓரிரு நிமிடங்களிலேயே அவர்  இறக்க நேரிடும்.  

 

m

 

2013-இல் பாதளச் சாக்கடையிலோ, செப்டிக் டேங்குகளிலோ மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. அதற்கென்றே பிரத்யேக இயந்திரங்கள் இருந்தும், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது நின்றபாடில்லை. செப்டிங் டேங்கில் இறங்கி உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது.  செப்டிக் டேங்குக்குள் ஒருவரை இறக்கிவிட்டாலே நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனாலும், சட்டத்தைக் கண்டுகொள்ளாத போக்கினால்,  செப்டிக் டேங்க் மரணங்கள் தொடர்கின்றன. 
உயிரைப் பணயம் வைத்து மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் என்று தீருமோ?

 

a

 

சார்ந்த செய்திகள்