ADVERTISEMENT

மத்திய சிறையில் பரபரப்பு; வார்டன்களை அலறவிட்ட கைதிகள்

12:48 PM Sep 25, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கோவை மத்திய சிறைச்சாலை. இந்த சிறையில், தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், 65 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், 35 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர். அதில், சிறைச்சாலையில் வால்மேடு பிளாக்கில் 600 கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு காலை, மதியம், இரவு என மூன்று வேளையிலும் உணவு வழங்கப்படுகிறது. மேலும், அவர்களைக் கண்காணிப்பதற்காக வார்டன்கள், சிறைக் காவலர்கள் என ஏராளமானோர் உள்ளனர். இத்தகைய சூழலில், கடந்த 21ஆம் தேதி காலை நேரத்தில் கைதிகளுக்கு உணவு வழங்குவதற்காக இரண்டு வார்டன்கள் வந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் ஒவ்வொரு அறையாக வந்துகொண்டிருந்தபோது சில கைதிகளிடம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை இருக்கிறதா? என சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில், சிறையில் இருந்த மண்டை தினேஷ் என்கிற தினேஷ், அய்யனார், அழகர்சாமி, உதயகுமார் உள்ளிட்ட 7 கைதிகளை மட்டும் தனியாக அழைத்துச் சென்று சோதனையில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால், இதற்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்காத வார்டன்கள் கைதிகளை தனித்தனியாக அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இதனால் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இவர்களுடைய சத்தம் கேட்டதால் அங்கு மேலும் சில காவலர்கள் வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் சிறைக்காவலர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சில வார்டன்கள் அவர்களை மடக்க முயற்சித்தனர். இதற்கிடையில், இருதரப்பினருக்கும் ஏற்பட்டிருந்த மோதல் அதிகமானதால் சிறை காவலர்களின் சட்டைகளை கிழித்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, வார்டன்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய சூழலில் சிறைச்சாலை முழுவதும் பரபரப்பாக காட்சியளித்த சமயத்தில், அப்போது அப்போது சில கைதிகள் வளாகத்திற்குள் இருந்த உயரமான மரத்தின் மீது ஏறிக்கொண்டு ‘‘எங்களைத் தாக்கினால், நடவடிக்கை எடுத்தால் கழுத்தை அறுத்து கொள்வோம்’’ எனக் கூறி பிளேடால் உடல் முழுவதும் கிழித்துக் கொண்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து, அங்குவந்த சிறைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், சிறையில் நடந்த திடீர் மோதலில் சிறை வார்டன்களான ராகுல், மோகன்ராஜ், பாபு ஜான், விமல் ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் 20 - 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, சிறையில் நடந்த இந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT