Prisoner who returned home on parole in Coimbatore suddenly absconded

கோவை மத்திய சிறையிலிருந்து பரோல் விடுப்பில் வீட்டுக்கு வந்த கைதி திடீரென்று தலைமறைவான சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் அழகாபுரம் மிட்டாபுதூரைச் சேர்ந்தவர் மோகன் (54). இவர், பெண்ணிடம் தகராறு செய்த வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவருக்கு சேலம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் உள்ளே இருந்த நிலையில், கடந்த ஆண்டு கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நன்னடத்தை அடிப்படையில் மோகனை சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளி சிறைக்கு மாற்றினர்.

Advertisment

இதற்கிடையே, காவல்துறை பாதுகாப்புடன் இரண்டுமுறை வீட்டுக்கு வந்து சென்றார். இந்நிலையில் மூன்றாவது முறையாக மூன்று நாள்கள்'பரோல்' விடுப்பு வழங்கியது சிறைத்துறை. அவர் மீதான நம்பிக்கையின் பேரில் இந்தமுறை காவல்துறையினர் பாதுகாப்பின்றி தனியாகவே வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பரோலில் சென்ற அவர் ஜன. 26, 27, 28 ஆகிய தேதிகளில் அழகாபுரம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட நிலையில், திடீரென்று தலைமறைவானார்.

இதையடுத்து கோவை மத்திய சிறை எஸ்பி ஊர்மிளா, இதுகுறித்து அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.விசாரணையின்போது மோகனின் மனைவி கூறுகையில், ''பரோல் முடிந்ததை அடுத்து நானும் என் கணவரும் ஜன. 28ம் தேதி கோவை மத்திய சிறைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். சங்ககிரியில் தேநீர் அருந்துவதற்காக பேருந்து நின்றது. அப்போது என் கணவர், இனிமேல் சிறைக்குச் செல்ல வேண்டாம். நாம் எங்காவது தலைமறைவாகி விடுவோம். நிம்மதியாக குடும்பம் நடத்தலாம்என்று கூறி அழைத்தார். அதற்கு நான் மறுத்ததோடு, சிறைக்குச் செல்லலாம் எனக் கூறினேன். மது போதையில் இருந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்” என்றார். இதனைத் தொடர்ந்து தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.