Skip to main content

கீழணையில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

Published on 14/10/2017 | Edited on 14/10/2017
கீழணையில் தண்ணீர் திறக்க கோரி
 விவசாயிகள் மறியல் போராட்டம்


கீழணையில்  பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில்,சிதம்பரம் வட்டபகுதிகள் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் ஒரு பகுதி, புவனகிரி வட்டத்தில் ஒரு பகுதி ஆகிய இடங்களுக்கு காவிரியில் கல்லணையிலிருந்து  கொள்ளிடத்துக்கு திறக்கப்படும்  தஞ்சை மாவட்டம் கீழணையில் தேக்கப்படுகிறது. இந்த தண்ணீர் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால்  ஆகிவற்றில்  திறந்து விடப்பட்டு கடலூர் மாவட்ட  காவிரி டெல்டா பகுதியில் சுமார் ஒரு 1லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. வடவாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் தேக்கி வைத்து பாசத்துக்கும், சென்னைக்கு குடிநீருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாதாலும் இப்பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 97 அடியை தாண்டி தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கும் உள்ளனர். மேட்டூர் அணை பாசனத்திற்காக  கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டது. கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் திறந்து கொள்ளிடத்தில் விடப்பட்டது. 

இந்த தண்ணீர் கடந்த காலங்களில் 3 தினங்களில் கீழணையை வந்தடையும். இந்த ஆண்டு  இன்றுடன் 13 தினங்கள் ஆகியும் இன்னும் வரவில்லை. இதனால் சம்பா சாகுபடி செய்ய காத்திருந்த விவசாயிகள், நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலமுறை சிதம்பரம் பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதற்குறி நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கடலூர் மாவட்ட விவசாயிகள் நேற்று காலை மணிக்கு அரியலூர் மாவட்ட பகுதியான கீழணையின் வடவாறு பகுதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்  இளங்கீரன் தலைமை தாங்கினார். 

காட்டுமன்னார்கோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.   
இதில் விவசாயிகள் நஜீர் அகமது, கென்னடி, கலியமூர்த்தி ,வெங்கடேசன், மூர்த்தி, கல்யாணராமன்,மூவேந்தன், அறிவழகன், தொல்காப்பியன், ராஜவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்டம் டி. பழுர், மீன்சுருட்டி ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள் வேலுசாமி ,நித்யா  மற்றும் போலீஸார் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகள் பொதுப்பணிதுறை அதிகாரிகள் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையொடுத்து சம்பவ இடத்திக்கு  கீழணை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரை முற்றுகையிட்டு விவசாயிகள் விரைவில் தண்ணீர் திறக்கவேண்டும் கோரிக்கை வைத்தனர். கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் திருபுறம்பியம் என்ற இடத்தில் சுமார் 25 கி.மீ தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீரை 8 அடி கீழணையில் தேக்கிய பிறகே திறக்க முடியும் என்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார். ஆனால் விவசாயிகள் இன்னும் சில தினங்களில் தற்போது தேங்கியுள்ள மழைநீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர் பேச்சு வார்த்தையில் திங்கள் கிழமை தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல்  போராட்டம் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட பகுதியை  பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததையொடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடலூர் மாவட்ட பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட மெத்தனம் காட்டுகின்றனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கீழணை பொதுப்பணிதுறை  உதவி செயற் பொறியாளர் சுப்பரமணியன் பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள், விவசாய சங்க தலைவர்களை பார்த்து தண்ணீர் திறக்க முடியாது உங்களால் என்ன செய்ய முடியும் என கூறினார் .இதனால்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அதிர்ச்சியுற்று ஆத்திரம் அடைந்தனர் . இதனையொடுத்து அவர்களை காவல்துறையினர்  சமாதானப்படுத்தினர்.இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்