Skip to main content

'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்' - எம்.ஜி.ஆர் பாடலை மேற்கோள்காட்டிய கமல்!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

kamal twit

 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மதுரை, தேனி, திண்டுக்கல் எனத் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக நேற்று கன்னியாகுமரி சென்ற கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோனை மேற்கொண்டார். பின்னர் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன்,

 

''பறக்கவேண்டும் என்றே ஒரு சின்னக் கொடி, அது பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி. அந்த அன்னக் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்த கட்சி, மக்கள் நீதி மய்யம். அதைச் செய்யவேண்டும் என நினைத்தாலே எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான். அதைச் செய்து காட்டிவிட்டால் அவரது ஆசிபெற்றுவந்த அவரின் அடுத்த வாரிசு நான்தான்'' எனப் பேசினார்.

 

அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரை, கமல்ஹாசன் சொந்தம் கொண்டாடுவது குறித்து அ.தி.மு.கவின் தலைவர்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து கமல்ஹாசன் அ.தி.மு.க ஆட்சியையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அரியலூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிடச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில், கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

 

கமல் குறித்து அவர் பேசுகையில், ''அவர் புதுசா கட்சியில் சேர்ந்திருக்கிறார். சினிமாவிலிருந்து ரிட்டையர்ட் ஆகி வந்திருக்கிறார். அவருக்கு என்ன தெரியும். 70 வயசு ஆகிறது. பிக்பாஸ் நடத்திட்டு இருக்காரு. பிக்பாஸ் நடத்துபவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும். எல்லாருக்கும் பிக்பாஸ் தெரியும். அதுல என்னங்க இருக்கு சொல்லுங்க. அதைப்போய் நடத்திக்கிட்டு இருக்காரு. அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லை. அந்த டிவி தொடரை பார்த்தால் குழந்தையும் கெட்டுப்போயிடும், நல்லா இருக்க குடும்பமும் கெட்டுப்போயிடும். இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் பாடல் பாடியிருக்கிறாரா? அந்தப் படத்தை பார்த்தா அந்தக் குடும்பம் அதோடு காலி'' என்று கமல் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்.

 

kamal twit

 

 

இந்நிலையில் ட்விட்டரில் கமல்ஹாசன், 'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை, அவர் எப்போதும் வால் பிடிப்பார். எதிர்காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கமல்ஹாசன் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களைக் குறை கூறுகிறார்” - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
JP Nadda alleges Kamal Haasan for kallakurichi issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மெளனம் காத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் 56 பேர் உயிரிழந்து, 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளின் கொடூரமான காட்சிகள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.  மல்லிகார்ஜுன கார்கே, கருணாபுரத்தில் பட்டியலின சாதியினர் அதிகம் வசிக்கின்றனர் என்று  உங்களுக்குத் தெரியும்.  அவர்கள் தமிழ்நாட்டில் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பேரழிவு வெளிச்சத்திற்கு வந்தபோதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ், இது குறித்து மௌனம் காத்து வருவதைக் கண்டு, ​​​​நான் அதிர்ச்சியடைந்தேன். சிபிஐ விசாரணைக்குச் செல்லவும்,  அமைச்சர் எஸ். முத்துசாமியை அவரது பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்வதையும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க-இந்தியா கூட்டணி அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.    

இன்று நீங்கள் நியாயமாக நடக்க வேண்டிய நேரம் இது. இன்று தமிழக மக்களும், ஒட்டுமொத்த பட்டியலின சமூகமும் சாட்சியாக உள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்களின் இரட்டை பேச்சு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நீது மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி குறை கூறுகிறார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில் குரல் எழுப்புவதற்கு தைரியத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஜெயிக்கப் போவது யாரு?- ஃபைனலை நெருங்கிய 'சூப்பர் சிங்கர் சீனியர்-சீசன் 10'  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Who Will Win?- 'Super Singer Senior-Season 10' Closer to Finals

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப் போட்டி,  ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன், வரும் ஜூன் 23 ஞாயிறு அன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான கொண்டாட்டத்துடன்  நடைபெறவுள்ளது.

பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து ஃபைனலிஸ்ட்ஸ் ஃபைனலில் கலந்துகொள்ளவுள்ளனர்.  விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்  என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது.  முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள்,  சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்ச்சியில்  பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட கானா மணிகண்டனுக்கு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே, திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பை வழங்கினார்.  மேலும் டாப் 10 இடம் பிடித்த திறமையாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழகுவதாக உறுதி அளித்துள்ளார். பாடகர் மனோவின் 40 வருட திரை வாழ்வைக் கொண்டாடும் விதமாக நடந்த சிறப்பு நிகழ்ச்சி, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.  

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய  சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ஃபைனல்ஸ் வரும் ஜூன் 23 ஞாயிறு மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. பலதரப்பட்ட பின்னணியிலிருந்து கலந்துகொண்டு தங்கள் திறமையால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து ஃபைனலிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.