ADVERTISEMENT

அ.தி.மு.க. வெற்றி அறிவிப்பு... பகிரங்கமான முறைகேடு..!

11:35 PM Mar 04, 2020 | Anonymous (not verified)

அமைச்சர்கள் உத்தரவுக்கு அடிபணிந்து வாக்களித்த மக்களை வெளிப்படையாகவே முட்டாளாக்கியுள்ளார்கள் ஈரோடு மாவட்ட அதிகாரிகள். இல்லையென்றால் மொத்த எண்ணிக்கை 10 ல் 7 பெரிதா? 3 பெரிதா? என்ற கணக்கில் 3 தான் பெரிது என குமாரசாமி கணக்கு போல் அறிவித்திருப்பார்களா?

ADVERTISEMENT

ADVERTISEMENT



இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரை அராஜகத்தால் நிறுத்தப்பட்டு, அடுத்து சென்ற ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. அதிலேயும் ஆளுங்கட்சி அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததால் பல இடங்களில் மீண்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. அப்படி ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் தூக்க நாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவருக்கான தேர்தல். இந்த தூக்கநாயக்கன் பாளையம் யூனியன் கவுன்சிலர்கள் மொத்தம் 10 பேர். இதில் அதிமுக மூன்று பேர் வெற்றி பெற்றிருந்தனர். திமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தார். ஆக திமுக கூட்டணி 7 பேர் அதிமுக 3 பேர் என்ற நிலை இருந்தது.

முதன் முதலாக தலைவர் பதவி தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 1வது வார்டு கவுன்சிலர் நடராஜ் என்பவர் வாக்களிக்கும் மையத்தில் திமுக உறுப்பினர்களை தாக்கியதோடு தேர்தல் அதிகாரி வசமிருந்த வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்தது அந்த வாக்குப் பெட்டியையும் தூக்கி கொண்டு ஓடிவிட்டார். இதனால் அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தேர்தலில் மீண்டும் இவர்கள் வன்முறை செய்வார்கள் என திமுக கூட்டணி ஏழு பேரும் எங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் தேர்தலை நியாயமாக நடக்கும் தேர்தல் அதிகாரி வேண்டுமென தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டது. பிறகு இன்று நான்காம் தேதி காலை தேர்தல் நடைபெற்றது. பத்து கவுன்சிலர்களும் வாக்களிக்கும் மையத்திற்கு வந்தனர். அப்போது அதிமுக சார்பில் விஜயலட்சுமி என்பவரும் திமுக சார்பில் ஆசீர்வாதம் என்கிற கவுன்சிலரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக அரசு அதிகாரி பொன்னம்பலம் என்பவர் இருந்தார். 10 பேரும் வாக்களித்த நிலையில் இறுதியாக வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டது என்பதைவிட அந்த வாக்குச்சீட்டுகளை அப்படியே எடுத்த தேர்தல் அதிகாரியான பொன்னம்பலம் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக திடீரென அறிவித்தார்.

உள்ளே இருந்த திமுக கவுன்சிலர்கள் 7 பேரும் பதறிப்போய் நாங்கள் ஏழு பேர் எங்கள் அணிக்கு ஓட்டு போட்டோம். எப்படி நீங்கள் வாக்கு படிவங்களை பார்க்காமலேயே சொல்கிறீர்கள் என பேசிக்கொண்டே இருக்கும்போது தேர்தல் முடிந்தது முடிவுகள் அறிவிக்கப்பட்டது என கூறிய தேர்தல் அதிகாரி பொன்னம்பலம் அங்கிருந்த வேறு அறைக்குள் சென்றுவிட்டார். அடுத்து போலீசார் உள்ளே வந்து திமுக கவுன்சிலர்களை சூழ்ந்து நின்று விட்டனர்.

இதனால் கோபமுற்ற திமுக கவுன்சிலர்கள் என்ன கொடுமை 7 பேர் இருந்தும் எங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் மூன்று பேர் மட்டுமே இருக்கும் அவர்களை வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்க முடியும். இது பட்டவர்த்தனமாக வெளிப்படையான முறைகேடு. இதை அரசு அதிகாரிகளே செய்திருப்பது சட்டவிரோதம் என கண்டன கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து நின்றனர். திமுக கவுன்சிலர்கள் மற்றும் அங்கிருந்து திமுகவினரை சாலை மறியல் செய்ய அவர்களை பலவந்தமாக சாலையிலிருந்து விரட்டிவிட்டனர். வெளிப்படையாகவே இப்படி ஒரு தேர்தல் நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் அதிகாரிகள் இப்படி அதிமுகவுக்கு சார்பாக நடந்துள்ளார்கள் என விசாரித்தபோது "அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகிய இருவருமே தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் அதிமுக வசம் தான் இருக்க வேண்டும். தேர்தல் நடந்தாலும் அதிமுக தான் அங்க தலைவராக இருக்கவேண்டும் அதற்கு அதிகாரிகள் என்ன செய்வீர்களோ தெரியாது. தேர்தல் முடிவை அதிமுக வெற்றியாக அறிவியுங்கள் என கூறியுள்ளனர்" என்ற தகவல் கிடைத்தது. அதற்கற்காகவே கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த யூனியனின் அதிகாரியாக இருக்கும் பொன்னம்பலத்தை தேர்தலில் போட்டு இதை நடத்தி உள்ளார்கள். தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வருகிறது. இதற்காகவே அதிகாரிகளும் இப்படி ஒரு பகிரங்க முறைகேட்டை நடத்தி முடித்துள்ளார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT