ADVERTISEMENT

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி; சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்

11:13 AM Jun 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாராயணசாமி(40). இவர் ஊத்தாங்கால் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பொன்னாலகரத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கம் செய்வதற்காக 12.30 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் நாராயணசாமியை அழைத்துச் சென்றுள்ளனர். மின்மாற்றியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி நாராயணசாமி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து நாராயணசாமி உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, விருத்தாசலம் - கடலூர் சாலையில், நேற்று ஊத்தாங்கால் மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊ.மங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விருத்தாசலம் வட்டாட்சியர் ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாகுல் ஹமீது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என மீண்டும் விருத்தாசலம்- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் லூர்து சாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இழப்பீடு கிடைக்கவும், உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT