Couple cheats hotel receptionist of Rs 25 lakh!

புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றிவந்த நபரை நீலகிரி மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரூ. 25.90 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம், முதுநகர் அருகேயுள்ள வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஆறுமுகம்(55). இவர், புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு நீலகிரி மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த காந்தராஜ்(39), அவரது மனைவி கோகிலா என்கிற சாய்பிரியா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்கள் தாங்கள் கோயம்புத்தூரில் சொந்தமாக கால் டாக்ஸி தொழில் செய்து வருவதாகவும், தற்போது கோயம்புத்தூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கால் டாக்சி காண்ட்ராக்ட் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும், இதனால் ஆறுமுகத்தை பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

Advertisment

இதற்கு ஆறுமுகம் சம்மதம் தெரிவித்ததையடுத்து, தங்களிடம் தற்போது பணம் இல்லை என்றும், மொத்த பணத்தையும் நீங்களே கட்டினால் உங்கள் பெயரிலேயே காண்ட்ராக்ட் எடுத்து கொள்ளலாம் என்றும் ஆறுமுகம் தம்பதி கூறியுள்ளனர். இதை நம்பிய ஆறுமுகம், காந்திராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோரின் வங்கி கணக்குகளில் கடந்த 19.6.2018 முதல் 28.11.2020 வரை ரூபாய் 25 லட்சத்து 80 ஆயிரத்து 580 ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். ஆனால், அவர்கள் சொன்னபடி ஆறுமுகத்துக்கு காண்ட்ராக்ட் எடுத்து கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.

காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் தங்கள் பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து ஆறுமுகத்துக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து ஆறுமுகம் இருவரிடமும் சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் இருவரும் ஆறுமுகத்திடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பணத்தை திருப்பி தரமுடியாது என்றும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். சக்தி கணேசனின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் வழிகாட்டுதலின்படி, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் முதல்நிலைக் காவலர் கௌரி ஆகியோர் காமராஜ் மற்றும் சாய்பிரியாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் புதுச்சேரி இளங்கோ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆறுமுகத்திடம் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

காந்திராஜ், சாய்பிரியா தம்பதியரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், இருவரும் பல பேரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறியும், கால்டாக்சி காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறியும் பல லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரும் யார் யாரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர், எவ்வளவு பணம் பெற்று மோசடி செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.