ADVERTISEMENT

தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்

12:14 PM Oct 01, 2019 | kalaimohan

தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்கி பெருமைப்படுத்தக் கோரி தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,

சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிரமர் மோடி விமானநிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, “உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.நா. அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.

தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல்பட்டது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி - சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி - சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக்கூட தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு; மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று மாற்றுவது, சமஸ்கிருத வாரத்தைகளை எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம் - வங்கி உள்ளிட்ட துறைகளில் இந்தியை மட்டும் முன்னிலைப்படுத்தி, மற்ற மொழி பேசுவோரின் வேலைவாய்ப்பைப் பறிப்பது, இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற குரலை அடிக்கடி ஒலிக்கச் செய்வது - இப்படி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்த நிலையில்; அதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி தரத் தக்க பெரிய மாற்றமாக, "தமிழ்தான் உலகின் பழமையான மொழி" என்ற வரலாற்று உண்மையை இந்தியப் பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பது அமைந்திருக்கிறது.

அதுவும், கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசின் நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல், மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளை பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட நிலையில்; தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் மூலம், சங்ககாலத் தமிழர்கள், அப்போதே உருவாக்கிய நகர நாகரீகத்தின் சிறப்புகள் வெளியாகியுள்ள சூழலில், தமிழின் பெருமை குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது, உலகத்தார் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய - இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்த முயற்சியின் முதல்கட்டமாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், அது பிறந்த இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகள் பலவற்றில், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள உண்மையை, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் அவர்கள், “இட்லி, தோசை, வடை, சாம்பார் ஆகியவை சுவையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள், விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்ட காலமாகவே பெயர் பெற்றவர்கள்.

எனவே பிரதமர் மோடி, இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் அவருக்கு என்றென்றம் நன்றி பாராட்டுவார்கள் எனக்கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT