ADVERTISEMENT

மருத்துவர் ராமதாஸ், பா.ஜ.க. சீனிவாசன் மீதான திமுக அவதூறு வழக்கு! - மனு விசாரணைக்கு ஏற்பது தள்ளிவைப்பு

08:55 PM Dec 02, 2019 | kirubahar@nakk…

பஞ்சமி நில விவகாரத்தில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மீது எழும்பூர் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 5-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சமி நில விவகாரம் :

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அசுரன் படத்தில் பஞ்சமி நில விவகாரம் குறித்து பேசப்படுவதைச் சுட்டிக்காட்டி, இது படம் அல்ல, பாடம் என்று கூறியிருந்தார்.

அதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான். அதை மு.க.ஸ்டாலின் திருப்பி கொடுப்பாரா? என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்து விட்டால், நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் ராமதாசும், அன்புமணியும் அரசியலை விட்டு விலகுவார்களா? என்று கேள்வி எழுப்பி முரசொலி நிலத்துக்கான பட்டாவையும் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

இந்தக் கருத்து மோதலைத் தொடர்ந்து, பட்டா வெளியிட்டால் போதுமா? மூலப்பத்திரம் எங்கே? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு மு.க.ஸ்டாலின், மூலப்பத்திரத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் சமர்ப்பிப்பேன் என்றார். பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் இடையே கருத்து மோதல் நீடித்து வந்தது.

இதற்கிடையே பா.ஜ.க. மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக நீதியின் சாம்பியன்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் தி.மு.க. பட்டியல் சாதி மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால் அவர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது என்று கூறி இருந்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் அவர் புகார் மனு கொடுத்தார்.

அவதூறு வழக்கு தாக்கல்:

இந்தநிலையில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை எழும்பூர் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில், டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்திலும், பா.ஜ.க. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தனது முகநூல் பக்கத்திலும் தி.மு.க. மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி இருப்பது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர்கள் இருவரையும் அவதூறு குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவைச் சரிபார்த்து, விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக அறிவிக்க 5-ஆம் தேதிக்கு எழும்பூர் கோர்ட் தள்ளிவைத்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT