Skip to main content

“மது இல்லாமல் இந்த தலைமுறையால் வாழ முடியாது...” - திராவிட கட்சிகளைச் சாடிய அன்புமணி ராமதாஸ்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

pmk anbumani ramadoss talk about dravida parties

 

சிவகாசியில் விருதுநகர் மத்திய மாவட்ட பா.ம.க. ஏற்பாடு செய்திருந்த இரண்டாமாண்டு கிராமிய திருவிழாவைத் தொடங்கி வைத்த பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸை, குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி குலவையிட்டு கும்ப மரியாதை செலுத்தி அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த கிராமியத் திருவிழாவில், தமிழரின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக வேலு நாச்சியார் குடில், பாரம்பரிய விவசாய மேம்பாட்டிற்கு அடித்தளமிட்ட விதைகளைக் கொண்ட நம்மாழ்வார் குடில், தமிழ் ஆராய்ச்சி குடில், அமுதம் இயற்கை உணவு குடில், பரம்பரை இசை வாத்திய குடில், மாயாண்டி பெட்டிக் கடை குடில் என ஏராளமான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

இளவட்டக்கல் தூக்குதல், உறியடித்தல், கிட்டி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தினர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை மற்றும் திறனை மேம்படுத்த கவிதை, கட்டுரை, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு கலையார்வமிக்க போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கினர். கிராமியத் திருவிழாவைத் துவக்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தற்போதுள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் கிராமம் என்ற பார்வையை நல்லவிதமாக மாற்றும் வகையில் கிராமிய விழா நடத்தப்படுகிறது. கிராமியக் கலைகளை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள 12,600 பஞ்சாயத்துகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தெருக்கூத்து கலையை தற்போதுள்ள மாணவர்கள் மறந்துவிட்டார்கள்.  இளம் தலைமுறையினர்  மத்தியில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், தமிழர்களின் பாரம்பரியத்தை அவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

 

மது இல்லாமல் இந்த தலைமுறையால் வாழ முடியாது என்ற நிலையைத் திராவிட கட்சிகள் ஏற்படுத்திவிட்டன. திராவிட மாடல் எனச் சொல்லும் ஆட்சியாளர்களால் மது வருமானம் இல்லாமல் ஆட்சி செய்ய முடியுமா? ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு அனுமதி கொடுப்பதுதான் ஆளுநர் வேலை. தமிழக அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல்  அளிக்கத் தாமதம் செய்யும் ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் கொள்கை முடிவைச் சொல்ல வேண்டும்.  ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர்தான் காரணம்.  ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை. ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தைக் கண்காணிக்கலாம். ஆனால்,   அரசியலில் ஈடுபடக்கூடாது.

 

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது. காப்புக்காடு அறிவிப்பு அவசியமற்றது. அதனைத் தமிழக அரசு நிறுத்த வேண்டும். நீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ. 1 லட்சம்  கோடி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். இலவசங்களைத் தவிர்த்து, நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.” எனப் பேட்டியளித்தார்.    

 

 

சார்ந்த செய்திகள்