ADVERTISEMENT

திருச்செந்தூர் மயில் சிலை காணாமல் போன விவகாரம்... ஐந்து பேர் மீது வழக்கு

08:25 AM May 02, 2019 | kalaimohan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவம் சம்பவத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் திருமேனி காவல் பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சாமி திருக்கோவில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோவில் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்த கோவிலில், மூலவர் சிலைக்கு முன்பு நந்தி சிலையும் அதனருகில் மயில் சிலைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் பழமையும் தொன்மையும் கொண்ட தேவ மயில் சிலை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அதற்கு பதிலாக ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த புதிய மயில் சிலை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிலை மாற்றம் குறித்து கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆன்மீக ஆர்வலர் ரங்கநாதன் என்பவர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். சிலை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பின்னரும் காவல்துறையில் புகார் அளிக்காமல் மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பழமையான சிலை காணாமல் போன பதினைந்து தினங்கள் கழித்து அங்கேயே வைத்துள்ளனர். சிலையை எடுத்துச் சென்றபோது மயிலின் தலை உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனை மறைக்க சிலையின் மேல் வெள்ளை துணி போட்டு மூடி வைத்திருந்தனர். இந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் கழித்து துறைரீதியான விசாரணை என்ற பெயரில் விசாரணைக்குச் சென்ற அதிகாரி திருமகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தாமல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக இந்த சம்பவத்தில் சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்த நிலையில்,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலிடம் தற்போதயை திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அறிவுறுத்தலின் பெயரில் மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவத்தில் கோவிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் சூப்பிரண்டு பத்மநாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ். ராஜ்குமார். சாமிநாதன் ஆகிய ஐந்து பேர் மீது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT