தமிழக அரசு உதவி செய்யாததால் வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. சொந்த பணத்தை செலவுசெய்து விசாரணை நடத்துகிறோம் அதற்கும் இடையூறு தருகின்றனர் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் புலம்பி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் நவபாஷாண முருகன் சிலையை சிலர் கடத்த முயற்சித்ததாக பொன்.மாணிக்கவேல் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் அருங்காட்சியகத்தில் 2009 ல் 31 சிலைகள் காணாமல்போன வழக்கையும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் எஸ்.பி.ராஜாராம் குழுவினர் விசாரிக்கின்றனர். இதில் தொடர்புடைய ஒன்பது பேரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சதீஷ்குமார் 44, சிவசிதம்பரம் 40, சிவா 44, ஆகியோர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து கிருஷ்ணர், காளி, திருமால் உள்ளிட்ட 21 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

pon.manikkavel interview

Advertisment

இதுகுறித்து கூடுதல் எஸ்.பி.ராஜாராம் கூறுகையில், மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ராம்குமார் கிருஷ்ணன் 35, என்பவரை உ.பி நேபாளம் எல்லையான சோனாலி சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் இந்திரா குழுவினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் கைது செய்யவும் மீதமுள்ள சிலைகளை மீட்கவும் விசாரணை நடக்கிறது என்றார். பொன்.மாணிக்கவேல் கூறுகையில் வெளிநாடுகளில் 2,000 கடத்தல் சிலைகள் உள்ளன. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரன் அறம்வளர்த்தநாகி சிவன் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் அம்மையார் அறம்வளர்த்தநாயகி, மாணிக்கவாசகர் நடராஜர் சிலைகள் களவுபோயின.

Advertisment

இதில் நடராஜர் சிலையை ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வாங்கினர். அவர்கள் மீண்டும் வழங்க தயராக உள்ளனர். தெய்வ திருமேனியை கொண்டுவர அரசு நிதி வழங்கும்படி முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரனிடம் கேட்டோம். அதற்கான நிதியை அரசு வழங்கவில்லை. சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சொந்த பணத்தை செலவு செய்கிறோம். இதுகுறித்து உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்துசமய அறநிலையத்துறையில் இருந்து பணம் தர வேண்டும். கடுமையான சூழ்நிலையில் பணிபுரிகிறேன். நீதிமன்றம் அதிகாரிகளாக எங்களை நியமித்துள்ளது. ஒரு உதவியாளர் கண்காணிப்பாளர் கேட்டும் தரவில்லை. கார், பெட்ரோல் செலவு எனக்குத்தான் தெரியும். தூக்கத்தை இழந்து வேலை செய்கிறோம். யாரும் உதவி செய்யவும் இல்லை. ஆனால் சொல்ல முடியாத அளவிற்கு நிறைய இடையூறுகள் உள்ளன. நேபாள எல்லைவரை சென்று சொந்த பணத்தை செலவழித்து குற்றவாளியை பிடித்துள்ளனர்.ஆனால் அரசு பணம் தரமறுக்கிறது. பழனி சிலை வழக்கில் முக்கிய சாட்சியான இணை ஆணையரை வேண்டும் என்றே தண்டிக்கின்றனர். சாட்சிகளை பாதுகாக்க உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன். சாட்சிகள் வரமறுப்பது வருத்தமாக உள்ளது. கோயிலுக்கு போனால் எங்களை பார்த்து ஓடுகின்றனர் என்றார்.