ADVERTISEMENT

போலி வங்கி நடத்தி போலீசில் சிக்கிய 19 வயது இளைஞர்!

01:59 PM Jul 14, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்த தம்பதி சையது கலீல்- லட்சுமி. இவர்களின் மகன் கமால்பாபு (வயது 19). கமால்பாபு தான் ஒரு வங்கி மேலாளர் எனக் கூறிக்கொண்டு 'பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி' என்று தாமாகவே வீட்டில் ஒரு வங்கி தொடங்கி நடத்தி வருவதாக பண்ருட்டி காவல்நிலையத்துக்கு புகார் வர கடந்த 08- ஆம் தேதி குற்ற எண் 1349/2020- 465, 473, 469, 484, 109 ஆகிய சட்டப் பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்து, கமால்பாபுவையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஈஸ்வரி ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம் (வயது 52), அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர் குமார் (வயது 42) ஆகியோரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்ததில், "சையத் கலீல் ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய போது உடன் பணியாற்றிய லட்சுமியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் கமால்பாபுவைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். இருவரும் வங்கி ஊழியர்கள் என்பதாலும், குழந்தையாக இருந்த கமால்பாபுவை பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததாலும் வங்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு அமரவைத்து விட்டு வேலை பார்த்து வந்துள்ளனர்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கிடைத்த குழந்தை என்பதால் கமால்பாபுவை ரொம்ப செல்லமாக வளர்த்தனர். குழந்தை சிறுவனாக ஆன நிலையிலும் வங்கிக்கு அழைத்துச் செல்லும் போது அங்கு வங்கித் தொடர்பான சின்னச் சின்ன வேலைகளைக் கமால்பாபுவை செய்து பழக்கியுள்ளனர். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சையத்கலீல் வங்கியில் பணியில் இருக்கும்போதே ‘ஹார்ட் அட்டாக்’கால் இறந்துவிட்டார்.

அது கமால்பாபு மனதை ரொம்பவே பாதித்துள்ளது. அப்பாவை போல, அதே வங்கியிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் விருட்சமாக வளர்ந்தது. வாரிசு அடிப்படையில் வேலை கேட்டு அதே வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். போதுமான வயது இல்லை என்பதால் வங்கி நிர்வாகம் அதைக் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மனரீதியாக பாதிப்புக்குள்ளான கமால்பாபு தன்னை ஒரு வங்கி அதிகாரியாக மனதளவில் பாவித்ததோடு அல்லாமல் தானே ஒரு வங்கிக் கிளை தொடங்க அனுமதி கேட்டும் ஒரு மின்னஞ்சலை மேலாளருக்கு மீண்டும் அனுப்பியிருக்கிறான்.

ஆனால் வங்கி அதிகாரிகள் இதை விளையாட்டாகக் கருதி கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் நிறைய சொத்துகள், நிறைய பணம் இருந்ததால் வீட்டுமாடியிலுள்ள அறையையே வங்கியாக மாற்றி, கம்ப்யூட்டர், பிரிண்டர், வருகைப் பதிவேடு, பணம் எடுக்கும்- போடும் செலான்கள், ஸ்டேட் பேங்க் சீல் எல்லாம் தயார் செய்து கொண்டார் கமால்பாபு. அவரது வங்கியில் 10 பேர் வேலை செய்வதுபோல் தினமும் வருகைப் பதிவேட்டில் அவரே அட்டெண்டன்ஸ் போட்டுவந்துள்ளார். அதையடுத்து கமாலினுடைய பெரியம்மாவிடம் அவர் பணி ஓய்வு பெற்ற பணம் இருந்திருக்கிறது.

அதைத் தனது வீட்டு வங்கி (நெட்பேங்க்) மூலம் அம்மாவின் அக்கவுண்ட்டிலிருந்து பெரியம்மாவின் அக்கவுண்ட்டுக்கும், பெரியம்மாவின் அக்கவுண்ட்டிலிருந்து தனது அக்கவுண்ட்டுக்கும், பணப் பரிமாற்றம் செய்து வந்துள்ளார். அம்மா, பெரியம்மாவின் கணக்கு எண் மற்றும் பாஸ்வர்டு தெரிந்திருப்பதால் பரிமாற்றம் செய்துள்ளார். மற்றபடி வேறு எந்தப் பரிமாற்றமும் இல்லை.

இந்த நிலையில்தான் கமால்பாபு வங்கி நடத்தும் செய்தியறிந்த சிலர் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து வங்கி அதிகாரிகள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ‘பண்ருட்டி நார்த் பஜார் ஸ்டேட் பேங்க்’ என்ற பெயரில் அங்கிருந்த பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்ததுடன் மேலாளர் வெங்கடேஷ் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் வீட்டுக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் டீம் விசாரணை செய்து கமால்பாபுவைக் கைது செய்ததுடன், இரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்தவர் மற்றும் செலான் அச்சடித்தவரும் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்டாம்ப் பேட் செய்தவர், அச்சடித்தவரை போலீசார் விசாரித்ததில் கமால்பாபுவின் பெற்றோர் வங்கியில் வேலை செய்தவர்கள் என்பதால் அவர்களுக்காகத்தான் வேலை கொடுக்கிறார் எனக் கருதி அச்சடித்து கொடுத்ததாகவும், அவரது உள்நோக்கம் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

‘நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆவாய்’ என்பதைப் போல வங்கி அதிகாரியாகவே தன்னைப் பாவித்துக்கொண்டுள்ளார் கமல்பாபு. ஆனால், நடைமுறைச் சிக்கல்களால் வங்கி அதிகாரியாக ஆக முடியாத விரக்தியில் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரின் வயதைக் கருத்தில்கொண்டு, சரியான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பண்ருட்டி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT