ADVERTISEMENT

“காந்தியைக் கொன்றவருக்குக் காந்தி அல்ல பிரச்சனை; மதச்சார்பின்மைதான்..” - சி.பி.எம். க. கனகராஜ்

05:23 PM Feb 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் இந்தியா இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜாவித்ஜாபர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது; “காந்தி படுகொலையை ஒரு மனிதப் படுகொலையாக மட்டும் நினைக்கக் கூடாது. இந்தியாவை ஒன்றாக்க வேண்டும் என நாடு முழுவதும் 685-க்கும் மேற்பட்ட சிறுசிறு சமாஸ்தானங்கள் இணைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என நீண்ட நெடிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மதச்சார்பின்மை ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், பொருளாதார சீர்திருத்தம், சமூக நீதியென நான்கு அம்சங்களும் விடுதலை பெற்ற இந்தியாவில் நான்கு தூண்களாக இருக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.

வேற்றுமையில் ஒற்றுமை; உணவு, உடை கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காந்தியடிகள் மேற்கத்திய கலாச்சாரம் அண்ட விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் நேரு மேற்கத்திய கலாச்சாரத்தின் படி இருந்தார். அப்படி உள்ளவரை இந்தியாவின் பிரதமராக நேருவை காந்தி வர வேண்டும் என்றார். அதற்கு ஒரே காரணம் அவர் மதச்சார்பின்மை உடன் நடந்து கொண்டது தான்.

காந்தியை கொன்றவருக்கு காந்தி அல்ல பிரச்சனை. இந்த மதச்சார்பின்மைதான் பிரச்சனை, இரண்டாவதாகக் கூட்டாட்சியை சிதைப்பதற்காக இந்தியாவில் பொது வெளியை வலது சாரி தத்துவம் ஆக்கிரமித்து விட்டார்கள். இதனைத் தடுப்பதற்கு சுதந்திரப்போரில் அரசியல் அல்லாத இயக்கங்கள் ஒன்று கூடியது போல் ஒரே இயக்கமாக ஒன்று கூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமா? ஒரே நாடாக இருக்க வேண்டுமா? இந்தியாவாகவே இருக்க வேண்டுமா என்பதுதான் மதச்சார்பின்மையை நிரூபிக்கப் போகிறது. காந்தி படுகொலை, ஆர்.எஸ்.எஸ்., சங்க் பரிவார கருத்துக்களை சாதாரண மக்கள் வரை அம்பலப்படுத்த உரையாடுவது அவசியமாகிறது” என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி பேசுகையில், “மதவெறியால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு நாதுராம்கோட்சே தான் தலைமை தாங்கினார் என்பதை நாட்டுமக்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற கருத்தரங்கு மூலம் ஜனநாயக வழியில் செய்து வருகிறோம். கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் காந்தி நினைவு நாளில் உறுதிமொழி எடுத்தபோது கோட்சே பெயரைச் சொல்லக் கூடாது என்று காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது.

தமிழக முதல்வர் தமிழகத்தில் கோட்சேவின் கொள்கைகளை அனுமதிக்கமாட்டோம் என்று கருத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறையினர் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி உள்ளிட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் முஷாரப், மனித நேய ஜனநாயக கட்சி துணை பொதுச் செயலாளர் தைமியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT