ADVERTISEMENT

“கிராமத்து மக்களுக்கும் கரோனா பரிசோதனைகளை அதிகமாக செய்ய வேண்டும்” - அமைச்சர் உத்தரவு!

11:26 AM May 27, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கிராமங்கள்வரை தொற்று பரவியுள்ளதால் கிராமத்து மக்கள் சாதாரணமாக நினைத்து அருகில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுவருகின்றனர். இருந்தும் தொற்றின் வேகம் அதிகரித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்குச் செல்வதால் உயிர்பலிகள் அதிகமாகிறது. உயிர்பலிகள் அதிகரிப்பதைப் பார்த்தே கிராம மக்கள் மருத்துவமனை செல்வதைத் தவிர்த்து மருந்தகங்களில் மாத்திரை வாங்கும் சூழ்நிலை தற்போதுவரை தொடர்கிறது.

இந்த நிலையை மாற்றி கிராமத்து மக்களுக்கும் தொடக்கத்திலேயே கரோனா பரிசோதனை செய்து, அவர்களுக்கான தொடக்க சிகிச்சையை உள்ளூரிலேயே வழங்கினால் உயிர்பலிகளைத் தடுப்பதோடு பரவலையும் கட்டுப்படுத்தலாம் என்பதால், அந்த திட்டத்தை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, அதிகாரிகள் மாணவர் விடுதியில் இடம் தேர்வுசெய்து, படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் மின்சாரம், ஜெனரேட்டர் வசதி மற்றும் உணவு, தண்ணீர் வசதிகளையும் செய்துள்ளனர். இந்தப் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியுடன் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் மெய்யநாதன் கூறும்போது, “சுகாதார நிலையம் உள்ள கிராமங்களில் உள்ள பள்ளி விடுதிகளில் இதுபோல கரோனா கண்காணிப்பு மையங்களை தொடங்கினால் பொதுமக்கள் அச்சமின்றி வந்து சிகிச்சை பெறுவார்கள். இவர்களுக்கு சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் அடிக்கடி காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிப்பார்கள். யாருக்காவது மேல் சிகிச்சை தேவை என்றால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படும். இதனால் மருத்துவக் கல்லூரியில் குவியும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிப்பதால் உயிர்பலிகளையும் தடுக்க முடியும். இதேபோல மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடங்கப்படும் என்றார். இந்தத் திட்டம் குறித்து கடந்த 21ஆம் தேதியே நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்து ஏம்பல் கிராமத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதேபோல அந்தந்த கிராமங்களிலேயே மக்கள் கண்காணிப்பு மையத்தை செயல்படுத்தினால் பரவலைத் தடுத்து உயிர்பலிகளையும் குறைக்கலாம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT