ADVERTISEMENT

காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! 

10:55 AM Jun 29, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் மனைவி சரவணசுந்தரி (வயது 40), கணேசன் மனைவி பத்மபிரியா (வயது 45). இவர்கள் இருவருக்கும் சொந்தமாக தலா இரண்டு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அந்த விளைநிலத்திற்கு 'பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 369 வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூபாய் 738 என சரவணசுந்தரியும், பத்மபிரியாவும் காப்பீட்டு பிரீமியமாக செலுத்தினர். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 18,142 ரூபாய் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் சரவணசுந்தரிக்கும், பத்மபிரியாவுக்கும் ஒரு காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் வழக்கு நிலுவையில் இருந்தபோது சரவணசுந்தரிக்கு காப்பீட்டு நிறுவனம் 35,256 ரூபாய் காலம் தாழ்த்தி வழங்கியது. மீதி தொகையான ரூபாய் 1,136 வழங்கவில்லை. மேலும் அதற்கு எவ்வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.


இவ்வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

அதில், காப்பீட்டு நிறுவனம் சரவணசுந்தரிக்கு காலதாமதமாக காப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளதால் நுகர்வோர் சேவை குறைபாடாக கருதப்படுகிறது. அதனால் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டிய மீதித் தொகையான ரூபாய் 1,136 மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 25 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 2000 ஆகியவற்றை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதேபோல் பத்மபிரியாவுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் காப்பீட்டு நிறுவனம் ரூபாய் 36,284 இழப்பீட்டுத் தொகையையும், ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு பாதிப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு ரூபாய் 25 ஆயிரமும் நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 5000 ஆகியவையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


இதேபோல் நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரிந்து வந்த காமராஜ் என்பவர் தபால் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் சேர்ந்து மாதாமாதம் தன்னுடைய சம்பள கணக்கில் இருந்து என்.எல்.சி நிறுவனம் பிடித்தம் செய்யும் 3 சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளார். 3 பாலிசியில் ஒரு பாலிசி தொலைந்து விட்டதால் அதன் நகலை வழங்க வேண்டுமென தபால் துறையை அணுகினார். தொலைந்த பாலிசி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு ஊழியரான பாலசுப்பிரமணி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.


உடனே காமராஜ் தபால் துறையை தொடர்பு கொண்டு தான் மாதந்தோறும் 1150 ரூபாய் சுமார் ஆறு வருடங்களுக்கு பிடித்தம் செலுத்தப்பட்ட தொகை ஆன 66,700 வட்டியுடன் கொடுக்க வேண்டும் என கேட்டபோது தபால் துறையினர் என்.எல்.சி நிர்வாகம் தவறான தொகையை பிடித்து வங்கியில் செலுத்தினால் தாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காமராஜ் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையீடு தாக்கல் செய்தார்.


இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் சேவை குறைபாடாக கருதி முதலீட்டாளர் காமராஜர் செலுத்திய தொகை 66,700 ரூபாய் அதற்குண்டான 9 சதவீத வட்டியுடன் டிசம்பர் 2009ல் இருந்து, இரண்டு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்றும் முதலீட்டாளர் காமராஜக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பாதிப்பிற்கு இழப்பீடாக 25 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையாக 10,000 என மொத்தம் ஒரு லட்சத்து 1,01,700 வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT