/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nlc_26.jpg)
என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவசாயி முருகன் என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வில் விசாரணையில் இருந்து வந்தது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், “என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து என்.எல்.சி தலைமை மேலாளர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'பயிர் இழப்பீடு வழங்க தனி நபர் பெயரில் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே காசோலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது' எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில், “விவசாயிகளுக்கு கருணைத்தொகை வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டறிந்த நீதிபதி, “அறுவடை முடிந்ததும் விவசாயிகள் என்.எல்.சி.யிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.புதிதாக நிலத்தில் பயிரிடக் கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது” எனத்தெரிவித்து நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)