ADVERTISEMENT

தனது செருப்பை எடுக்கச் சொன்ன ஆட்சியர்; வீடியோ வைரல் ஆனதால் அதிர்ச்சி

06:29 PM Apr 12, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உதவியாளரை அழைத்து தனது செருப்பை தூக்கச் சொன்ன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வரும் 18ம் தேதி சாகைவார்த்தலுடன் துவங்க உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வார்கள். அடுத்த மாதம் இரண்டாம் தேதி தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்கு அடுத்த நாள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இதனையொட்டி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்பொழுது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலணியை கழட்டி விட்டு தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் செல்லுமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் வந்து எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் அங்கே ஆய்வுக்காக வந்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கோவை மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு மற்றும் அதனையொட்டி ஏற்பட்ட கலவரத்தின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது உதவியாளரை அழைத்து தனது ஷூவை எடுக்கச் சொல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சக மனிதர்களை மனிதர்களாக மதிக்காத தன்மை இது. மனித உரிமை மீறிய செயல். எனவே, மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் குரல் எழுப்பப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT