Skip to main content

நீட் தேர்வில் சாதித்த சலவைத் தொழிலாளி மகள்! 7.5% இடஒதுக்கீட்டால் நேர்ந்த நன்மை!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Government school student passed at neet

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது பரிகம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான மாசிலாமணி என்பவரது மகள் 19 வயது மதுமிதா. இவர் கடந்த ஆண்டு எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்துள்ளார். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600க்கு 480 மதிப்பெண் பெற்றுள்ளார். 


அதன் பிறகு, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், இதற்காக அவர் எந்தப் பயிற்சி மையத்திற்கும் சென்று படிக்காமல், வீட்டில் இருந்தபடியே அவரே படித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் 720க்கு 358 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் மாணவி மதுமிதா மாநில அளவில் 242 ஆவது இடத்தையும் மாவட்ட அளவில் 9 ஆவது இடத்தையும் பெற்று மருத்துவப் படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளார். 
 

இவருக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது கண்டு அவரது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் மக்கள் அனைவரும் மதுமிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுப் பள்ளியில் படித்த மாணவி, நீட் தேர்வுக்கென்று தனியாகப் பயிற்சி மையத்திற்குச் சென்று படிக்காமல் தானே படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைத்துள்ளது கண்டு அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.