ADVERTISEMENT

துப்புரவுப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து பலி; நாகையில் அவலம்

12:33 PM Jun 23, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை கோட்டைவாசல் அருகே நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளைக் கொட்டச் சென்ற டிப்பர் லாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர் ஒருவர் பரிதாபமாகப் பலியான சம்பவம் பலரையும் பதைபதைக்க செய்துள்ளது.

நாகை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்கிற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல இன்று காலை பணிக்கு சென்று, நாகை அண்ணா சிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக துப்புரவு பணியாளர்களுடன் குப்பைகளை சேகரித்து குப்பை ஏற்றும் டிப்பர் லாரி வாகனத்தில் குப்பைகளை கொட்டச் சென்றுள்ளார்.

நாகை கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள நாகை நகராட்சி குப்பை உரக்கிடங்கில் டிப்பர் லாரி மூலம் குப்பையைத் தூக்கி கொட்டும் பொழுது மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் வாகனத்தின் மேல் பகுதி உரசி மின் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் மீது கை வைத்த தூய்மை பணியாளரான விஜய் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தில் இருந்த ஓட்டுநர் ஜோதியும் படுகாயம் அடைந்தார்.

நகராட்சி ஓட்டுநரான கும்பகோணத்தைச் சேர்ந்த ஜோதி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உயிரிழந்த விஜயின் சடலத்தை கைப்பற்றிய நாகை நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயின் சடலத்தை பார்த்த மனைவி மற்றும் அவரது உறவினர்கள் , சக தூய்மை பணியாளர்கள் பச்சிளம் குழந்தையை வைத்துகொண்டு கதறி அழுத காட்சி காண்போரை பதைபதைக்க செய்தது.

இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு இழப்பீடும் தமிழக அரசு நிரந்தர வேலையும், நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வேண்டியும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அரசு மருத்துவமனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து நாகை நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

நாகையில் குப்பைக் கொட்ட சென்ற துப்புரவுப் பணியாளர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியானதும், மற்றொருவர் படுகாயம் அடைந்த நிகழ்வும் சக நகராட்சி தொழிலாளர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT