ADVERTISEMENT

“இது முதலமைச்சரின் கனவு திட்டம்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

10:44 AM Oct 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அப்பகுதியை சீர்படுத்துவதற்கான திட்டங்களைப் பார்வையிட்டு, அதில் ஒரு திட்டப்பகுதியை இன்று (12.10.2021) அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கிவைத்தனர். சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பைக் கிடங்கை இன்று காலை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளைப் பார்வையிட்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

முதலில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பது நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு மிகவும் சவாலான ஒரு பணி. பல பேரூராட்சிகளில் குப்பைகள் கொட்டுவதற்கான இடங்களைத் தேடுவதே பெரும் சிக்கலாக உள்ளது. ஒருபுறம் குப்பைகளை மக்கள் எடுக்கச் சொல்கிறார்கள் மற்றொருபுறம் அந்தக் குப்பைகளை தங்கள் இடங்களில் கொட்ட வேண்டாம் என்கிறார்கள். இந்த சிக்கல்களைக் களையவே பயோ மைனிங் முறையில் பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக, உலோகங்கள் தனியாக, மக்கும் குப்பைகள் தனியாக என்று குப்பைகளைப் பிரிப்பதற்காகதான் டெண்டர் விடப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த பத்து ஆண்டு காலமும் எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டனர்.

இந்த பயோ மைனிங் முறை என்பது பெருங்குடி பகுதியில் உள்ள மொத்த குப்பைகளை 6 பேக்கேஜ்களாக பிரித்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியை மீட்டெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பெருங்குடிப் பகுதியின் 235 ஏக்கரில் 34 லட்சத்தி 2000 டன் பழைய குப்பைகள் மட்டும் உள்ளது. இந்தப் பகுதியை மீட்டெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதைப் போலவே கொடுங்கையூரில் அடுத்த ஆறு மாதத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகரின் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் பலவாறு செய்யப்பட்டிருந்தது.

சென்ற திமுக அரசு இப்பகுதியை மேம்படுத்த திட்டங்கள் போட்டிருப்பினும் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்தவர்கள் இந்தப் பகுதியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உண்மையிலேயே இந்தக் குப்பைகளை எடுத்து பிரித்து நீக்கக்கூடிய இந்த திட்டமானது, சென்னைக்கு மிகப்பெரிய விடியல். இது முதலமைச்சரின் கனவு திட்டம். இப்பகுதியிலுள்ள செங்கல் படிவங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகள் என அவற்றைப் பிரித்தெடுத்து சீர்படுத்தி, இதேபோல உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டுப் பகுதி நிலத்தையும் பசுமையாக மாற்றுவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும்” என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT