Skip to main content

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக எம்.ஜி.எம். மருத்துவமனை மீது வழக்கு! 

Published on 04/10/2020 | Edited on 04/10/2020

 

 

chennai high court private hospital coronavirus treatment

கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்த எம்.ஜி.எம். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த  கணேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் டி.ஆர் பிரபாகரன், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதம் 25- ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள  எம்.ஜி.எம் மருத்துவமனையில் எனது (கணேஷின்)  தந்தை குமாரை அனுமதித்து,  வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்  செலுத்திய நிலையில்,  உரிய சிகிச்சை வழங்காததால்,  கடந்த ஆகஸ்ட் 3- ஆம் தேதி இறந்துவிட்டார்.

 

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு, உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்பந்தப்படுத்தி, மொத்தமாக 10 நாளைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்துள்ளனர்.

 

இது தவிர, தன் தந்தையின் மருத்துவச் செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களைக் கேட்ட நிலையில், தனது தந்தையின் மருத்துவ விபரங்களுக்குப் பதிலாக, வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கினர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுத்தனர்.

 

எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு மனு அளித்த நிலையில், அந்த  மனு மீது விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்தும், இதுவரை முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

 

அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக  வசூலித்த தொகையை திரும்ப தர வேண்டும்.  மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.