ADVERTISEMENT

தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கைக்குத் தமிழக அரசிடம் திட்டம் இல்லை! - உண்மையை உடைத்த மத்திய அரசின் கடிதம்!

08:26 PM Nov 24, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


விருதுநகர் பாராளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கடந்த 20-09-2020 அன்று, இந்திய பாராளுமன்றத்தில், விதி எண் 377-ன் கீழ், தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சாதிப் பிரிவுகளை, தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அறிவிப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இது, பூஜ்ய நேரக் கேள்வியாகக் கேட்கப்பட்டும், கடிதமாகவும் அவரால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு, கடந்த 18-ஆம் தேதி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு, கடித வாயிலாகப் பதில் அனுப்பியுள்ளது.

அதில், ‘இந்திய அரசியலமைப்பின் 341-வது பிரிவு விதிகளின் கீழ், பட்டியலிடப்பட்ட சாதிகள் அறிவிக்கப்படுகின்றன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் தொடர்பான பட்டியல் சாதியினரின் முதல் பட்டியலானது, குடியரசுத் தலைவரின் அறிவிக்கப்பட்ட உத்தரவாகும். எந்தவொரு அடுத்தடுத்த மாற்றத்தையும், பாராளுமன்றத்தினால் மட்டுமே ஏற்படுத்த முடியும். மேலும், பட்டியலின சாதிகள் மற்றும் பழங்குடியினரை பட்டியலில் சேர்ப்பது, விலக்குவது மற்றும் பிற மாற்றங்களுக்கான உரிமை கோரல்களை தீர்மானிப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் வகுத்துள்ளது.

தற்போதைய பட்டியலிப்பட்ட சாதிகளின் பட்டியலை மாற்றியமைப்பதற்கு, மக்கள் இன அமைப்பியல் ஆதரவுடன், முழுமையான முன்மொழிவு ஒப்புதலானது, மத்திய அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தாலேயே தொடங்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முறைகளின் பிரகாரம், தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சமூகப் பிரிவுகளை, தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுவான பெயரில் ஒருங்கிணைப்பதற்கான எந்தத் திட்டமும் தமிழக அரசிடம் இல்லை.’ எனத் தெரிவித்துள்ளது.

‘ஏழு உட்பிரிவுகள் ஒருங்கிணைந்த தேவேந்திரகுல வேளாளர்’ என்ற பெயர் மாற்ற கோரிக்கைக்கு, ‘ஏற்கத்தக்க நடைமுறைத் திட்டங்கள்’ எதுவும், தமிழக அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்திவிட்டது, மத்திய அரசின் கடிதம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT