Skip to main content

“தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் வழக்கம் போல் ஏமாற்றமே..!” - பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

The Chief Minister mk stalin has released a statement on the budget

 

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

 

அதில், நாட்டில் 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். சிறு குறு நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். 2070 ஆம் ஆண்டிற்குள் வாகன புகை வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பான் கார்டு இனி அரசுத்துறை கொள்கைகளில் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும். மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. 

 

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், ‘இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு’, ‘மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்’, ‘கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது’ போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

 

ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

 

நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ் உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

 

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. 

 

கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.