ADVERTISEMENT

ஆடிப்பெருக்கு; காவிரி ஆற்றில் புனித நீராட கட்டுப்பாடு; ஆட்சியர் எச்சரிக்கை!

07:40 AM Aug 03, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, காவிரி ஆற்றில் புனித நீராடுவோர், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 75 ஆயிரம் கன அடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அணைக்கு வரும் நீர் மொத்தமும் உபரி நீராக வெளியேற்றப்படும்.

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்படும் என வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி, ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன.

ஆகஸ்ட் 3- ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் புனித நீராட வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதோ, செல்போன் மூலம் செல்பி எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது." இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT