ADVERTISEMENT

3 அரசர்களின் திருக்காட்சி பெருவிழா; ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டவர்கள் மீது வழக்கு

11:32 AM Jan 08, 2024 | ArunPrakash

குழந்தை இயேசு பிறந்ததும் அவரைக் காண்பதற்காக புனித கஸ்பார், புனித மெல்க்யூர், புனித பல்த்தசார் ஆகிய 3 அரசர்கள் சென்று இயேசுவை பார்த்ததை நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு செய்யும் திருக்காட்சி பெருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நடைபெற்றது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதேபோல ஆவுடையார்கோவில் அருகே உள்ள மூவனூர் தூய அடைக்கல அன்னை ஆலயத்திற்கு கட்டுப்பட்ட பல கிராம மக்களும் ஒவ்வொரு நாட்களில் பொங்கல் வைத்தனர். நேற்று 5 கிராம மக்கள் பொங்கலிட்டனர். பல கிராமங்களில் இருந்தும் பனை ஓலை கூடைகளில் பொங்கல் பானை, பொங்கல் பொருட்களை ஆலயத்திற்கு கொண்டு வந்து வரிசையாக அடுப்பு வைத்து பொங்கல் வைத்த பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்த பிறகு ஒரே இடத்தில் பொங்கல் கூடைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து தங்கள் வீடுகளில் இருந்து ஓட்டிவரப்பட்ட கால்நடைகளுக்கு மாலை அணிவித்து ஜெபம் செய்து ஓட்டிச் சென்றனர். இந்த பொங்கல் விழாவைக் காண மலேசியா நாட்டில் இருந்தும் பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். இதேபோல, கோட்டைக்காட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஓட்டி வந்து வழிபாடு நடத்தினர். பின்னர், 15க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டனர். கூட்டத்துக்குள் காளைகள் புகுந்து முட்டியதில் 5க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் வடகாடு போலீஸார் சென்று காளைகள் அவிழ்க்கப்படுவதை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளைகளை அவித்துவிட்டதாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் வடகாடு போலீசார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT