திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதிகளில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 154 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் வந்து கலந்துக்கொண்டு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனர். மஞ்சுவிரட்டு போட்டி இன்னும் ஒரு மாதம் நீளும்.

போட்டி நடத்த அனுமதி கேட்டுள்ள கிராமங்களுக்கு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒருநாள் என ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்துள்ளது. இப்படி திருவிழா நடைபெறும் இடங்களில் சூதா கும்பல்கள் படையெடுக்கின்றன.
பிதாமகன் படத்தில் சூர்யா ஒரு டப்பாவில் 3 சிறிய கட்டைகளை போட்டு உலுக்கி, என்ன எண் வரும் எனக்கேட்டு பணம் கட்டச்சொல்வார். பணம் கட்டியவர்கள் சொன்ன எண் வந்தால் கட்டிய பணத்தை விட இரண்டு மடங்கு. வரவில்லையென்றால் பணம் அவர்களுக்கு எனக்காட்டுவார்கள்.

அந்த மூன்று கட்டை சூதாட்டக்காரர்கள் கிராமங்களுக்கு சென்று தரைவிரிப்பை விரித்து வைத்துவிட்டு டப்பாவில் கட்டையை போட்டு குலுக்கி பார்வையாளர்கள் கவனத்தை தங்கள் பக்கம் ஈடுக்கின்றனர். மஞ்சுவிரட்டு பார்க்க வரக்கூடிய இளைஞர்கள், அதன் மீது நாட்டம் செல்லாமல் இந்த சூதாட்டத்தின் மீது கவனத்தை திருப்புகிறார்கள்.
அங்கு வந்து தாங்கள் வைத்துள்ள பணத்தையெல்லாம் சூதாட்டக்காரர்களிடம் தந்துவிட்டு செல்கின்றனர். மஞ்சுவிரட்டுக்கு பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், இளைஞர்களையும், சூதாட்டக்காரர்களை விரட்டியும் கூட செல்லாமல் தொடர்ந்து மூன்று கட்டை சூதாட்டம் நடைபெற்று வருகிறது.