/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4393.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் ராமராஜ் (32). இவரது மனைவி ஹேமலதா. ராமராஜ் திருப்பூரில் ஜவுளி, பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது சென்னை சூளைமேட்டைச்சேர்ந்த ராஜேஷ் (41) என்பவருடன் பனியன் வியாபாரம் செய்த வகையில் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கத்தின் அடிப்படையில் ராமராஜ், ராஜேஷிடம் ரூ. 9 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த தொகையை ராஜேஷுக்கு ராமராஜ் 2 வருடங்களாகத்திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பூரில் ராமராஜ் நடத்தி வந்த பனியன் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் உள்ள தனது மனைவி ஹேமலதாவின் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த ராஜேஷ், ராமராஜை கடத்திச் சென்று மிரட்டி அவரிடம் கொடுத்த கடனை வாங்க முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம்தேதி கூலிப் படையினரான சென்னையைச் சேர்ந்த முஸ்தபா (28), சென்னை ஆவடியைச் சேர்ந்த கீர்த்தி (38), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (34), அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (24), சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இருதயராஜ் (43) ஆகிய 6 பேரும் மணிகண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு நின்று கொண்டு ராமராஜை அங்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு சென்ற ராமராஜை, ராஜேஷ் உள்ளிட்ட கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றனர். கடன் கொடுத்தவர்கள் அழைத்ததாகக் கூறி சென்ற கணவர் இரவாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த ஹேமலதா, இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மேற்பார்வையில்போலீஸார் தனசேகர், இளையராஜா ஆகியோர் ராமராஜன் செல்போன் சிக்னலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த செல்போன் சிக்னலைவைத்து கடத்தல் கும்பல் இருந்த இடத்தை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்துசென்று ராமராஜை மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட ஆறு நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)